ஜன.31 வரையிலான பயிர்க்கடன், வட்டி தள்ளுபடி... வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியீடு!
சென்னை: விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரத்து செய்ததற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில், பயிர்க்கடன் ரத்துக்கான ரசீதை விவசாயிகளுக்கு நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.
விவசாயிகளுக்கு ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்திருந்தார்.

ரூ.12,000 கோடி பயிர்க்கடன் ரத்து
கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,000 கோடி மதிப்புள்ள பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.இந்த அறிவிப்பின் மூலம் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் அடைவார்கள் என்றும் முதல்வர் அறிவித்தார்.

விவசாயிகள் வரவேற்பு
வறட்சி, காலம் தவறிய மழை, வெள்ளம் போன்ற பல்வேறு இயற்கை பேரிடர்களை விவசாயிகள் சந்தித்து வருகிறார்கள். எனவே விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. விவசாய சங்கத்தின் தலைவர்கள் பலரும் முதல்வர் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அரசாணை வெளியீடு
விவசாய சங்கத்தின் தலைவர்கள் பலரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தும் நன்றி தெரிவித்தனர்.பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. விரைவில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீதை விவசாயிகளுக்கு வழங்குவேன் என்று முதல்வர் கூறி இருந்தார்.

கடன் வசூலிக்க கூடாது
இந்த நிலையில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-- ஜன.31 வரை நிலுவையில் இருந்த பயிர்க்கடன், வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும். தள்ளுபடி செய்ய தகுதியான கடன்களை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் புதிய கடன்கள் பெற தகுதி உடையவர்கள். நிலுவையின்மை சான்று வழங்கியவுடன் அசல் நிலப் பதிவேடு, ஆவணங்கள், நகைகள் திருப்பி தர வேண்டும். குறுகிய கால பயிர்க்கடன், நகையை வைத்து பெறப்பட்ட குறுகிய கால பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். சிட்டா, பட்டாவுடன் குறிப்பிட்ட நிலத்தில் பயிர் செய்ய நகையை வைத்து பெறப்பட்ட கடன் தள்ளுபடி செய்யபப்டும்.

குற்ற நடவடிக்கை இருக்க கூடாது
வேளாண் சாராத இனங்களுக்கு வழங்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது. பயிர்க் கடன்களுக்கான மானியம் பெற்று இருந்தால் எஞ்சிய தொகை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். குற்ற நடவடிக்கை, நிதி முறைகேடுகளுக்கு உள்ளான இனங்களுக்கு கடன் தள்ளுபடி இல்லை. கூட்டுறவு சங்கங்ளுக்கு மொத்த தள்ளுபடி தொகை 7% வட்டியுடன் தவணைகளில் 5 ஆண்டில் விடுவிக்கப்படும். நபார்டு வங்கிக்கு செலுத்தபட வேண்டிய தொகையை வட்டியுடன் அரசே செலுத்தும். ஒவ்வொரு விவசாயிக்கும் கடன் தள்ளுபடி சான்றிதழ், நிலுவையின்மை சான்று வழங்கப்ட வேண்டும். அபராத வட்டி மற்றும் இதர செலவினங்களை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களே ஏற்க வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில், பயிர்க்கடன் ரத்துக்கான ரசீதை விவசாயிகளுக்கு நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். அதன்பிறகு தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்த ரசீது வழங்கப்பட உள்ளது.

முக ஸ்டாலின் குற்றச்சாட்டு
அதிமுக அரசு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்தது தேர்தல் உள்நோக்கம் கொண்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. திமுக ஆட்சிக்கும் வந்ததும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யபப்டும் என அறிவித்ததாகவும், திமுக சொன்னதைதான் தமிழக அரசு செய்துள்ளது என்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications