விஜய்க்கு தலைவலி.. தவெக மாநாடு வி.சாலையில் நடக்குமா? உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் செய்த சம்பவம்!
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு விக்கிரவாண்டி வி.சாலை அருகே நடக்க இருப்பதாக நிர்வாகிகள் அறிவித்திருக்கும் நிலையில், காவல்துறையினரிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநாடு நடத்த காவல்துறையினர் அனுமதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்ததில் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திய மாநாடும் ஒரு காரணம் என்கின்றனர்..
நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் மிக்க ஆவலில் இருக்கிறார். இன்னும் சில நாட்களில் தனது கட்சியின் முதல் மாநாடு நடக்கவிருக்கும் நிலையில், அதனை எதிர்நோக்கி இருக்கிறார். விஜயை போலவே அவரது ரசிகர்களும், கட்சியினரும் ஆர்வத்துடன் உள்ளனர்.

விக்கிரவாண்டி அருகே வி.சாலை பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடக்க இருப்பதை அக்கட்சி நிர்வாகிகள் உறுதி செய்திருக்கின்றனர். டோல்கேட் அருகே மாநாடு நடத்த அனுமதிக்க வேண்டுமென அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்திருக்கிறார்.
செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடக்கும் எனவும் அதற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்க வேண்டும் என விழுப்புரம் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 23ஆம் தேதி வி.சாலை கிராமத்தில் மாநாடு நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சுமார் 85 ஏக்கர் நிலப்பரப்பு வாடகைக்கு எடுக்கப்பட்டு சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இருந்து கட்சியினர் வருவார்கள் என்பதால் அதற்காக பார்க்கிங், உணவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட இருக்கிறது.
பார்க்கிங்கு மட்டுமே சுமார் 60 ஏக்கர் நிலம் வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் இடது புறம் உள்ள சுமார் 28 ஏக்கர் நிலப்பரப்பில் பார்க்கிங் செய்யப்பட இருக்கின்றன. வட மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த நாற்பது ஏக்கர் நிலப்பரப்பு வலது புறம் வாடகைக்கு பெறப்பட்டிருக்கிறது. மேலும் டூவீலர் பார்க்கிங்கு மட்டும் சுமார் ஐந்து ஏக்க நிலப்பரப்பு வாடகைக்கு எடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் விஜய் மாநாட்டுக்கு காவல்துறையினர் அனுமதி அளிப்பதில் சிக்கல் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தவெக மாநாடு நடக்குமிடம் விக்ரவாண்டி டோல்கேட் பகுதியில் இருந்து குறைந்த தூரத்தில் தான் இருக்கிறது. வழக்கமாக விடுமுறை நாட்கள் வார இறுதி நாட்களில் விக்கிரவாண்டி டோல்கேட் மிகவும் போக்குவரத்து நெரிசலோடு காணப்படும். கிலோமீட்டர் கணக்கில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
அப்படி விஜய் மாநாடு நடத்தினால் விக்கிரவாண்டி டோல்கேட் பகுதியில் சுமார் 10 கிலோமீட்டருக்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக போலீசார் நினைக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் மாநாட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தான் தேசிய நெடுஞ்சாலை வருகிறது. இதன் காரணமாக சென்னை விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவு வாகனங்கள் வரும்போது பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவருமான விஜயகாந்த் தனது கட்சி மாநாட்டை உளுந்தூர்பேட்டையில் நடத்தி இருந்தார். இதனால் அப்போதே நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விஜய்க்கும் அதிகளவு கூட்டம் வரும் என்பதால் மாநாட்டிற்கு அனுமதி அளிப்பதில் சிக்கல் இருக்கிறது.
இதுமட்டும் இல்லாமல் விஜய் மாநாடு நடத்தும் இடங்களைச் சுற்றி நிறைய விவசாய கிணறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விபத்து அபாயமும் ஏற்பட்டிருக்கிறது.எனவே கிணறுகளை மூடிவிட்டு அதாவது கம்பி வேலி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தால் மட்டுமே அங்கு விபத்துகள் ஏற்படாது என்கின்றனர். இப்படியாக மாநாட்டுக்கு இடம் கிடைப்பதே சிக்கலாக இருந்த நிலையில் தற்போது மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications