கொரோனா.. ஆக்சிஜன் பற்றாக்குறையால் இந்தியாவில் ஒருவர் கூட சாகவில்லை..ராஜ்ய சபாவில் மத்திய அரசு பதில்
சென்னை: இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் போது எந்த மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா மரணங்கள் ஏற்படவில்லை என்று மத்திய அரசு ராஜ்ய சபாவில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பலர் பலியானதாக செய்திகள் வந்தன. முக்கியமாக டெல்லி, உத்தர பிரதேசம், பீகாரில் ஆக்சிஜன் கிடைக்காமல் பல கொரோனா நோயாளிகள் பலியானதாக செய்திகள் வந்தன.
மத்திய அரசின் ஆக்சிஜன் பங்கீட்டு கொள்கையை உச்ச நீதிமன்றமும் விமர்சனம் செய்து இருந்தது. இந்த நிலையில் இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக எத்தனை பேர் பலியானார்கள், ஆக்சிஜன் காரணமாக ஏற்பட்ட பலி எண்ணிக்கை இரண்டாம் அலையின் போது மறைக்கப்பட்டதா என்று சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ராஜய்சபாவில் கேள்வி எழுப்பின.

பதில்
இதற்கு ராஜய்சபாவில் பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், இந்தியாவில் சுகாதாரத்துறை என்பது மாநிலங்களின் அதிகாரத்திற்கு கீழ் வருகிறது. மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் வெளியிடும் பலி எண்ணிக்கையைதான் மத்திய அரசு வெளியே தெரிவிக்கிறது. கொரோனா மரணங்களை கணக்கீடு செய்வதற்காக மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

இல்லை
அதன்படி இந்தியாவில் இரண்டாம் அலையின் போது எந்த மாநிலத்திலும், அல்லது யூனியன் பிரதேசத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா மரணங்கள் ஏற்படவில்லை. ஆனால் இந்தியாவில் இரண்டாம் அலையின் போது நோயாளிகள் அதிகம் ஆனதால் ஆக்சிஜன் தேவையும் அதிகம் ஆனது. ஆக்சிஜன் தேவை 9,000 மெட்ரிக் டன் வரை சென்றது.

இயல்பு இல்லை
முதல் அலையின் போது ஆக்சிஜன் தேவை 3,095 மெட்ரிக் டன் என்ற அளவிலேயே இருந்தது. இரண்டாம் அலையில் இது புதிய உச்சம் தொட்டது. இதையடுத்தே இந்தியாவில் மாநிலங்களின் தேவையை பொறுத்து ஆக்சிஜன் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதற்கான பார்முலா உருவாக்கப்பட்டு மாநிலங்களின் ஆக்டிவ் கேஸ்களில் அடிப்படையில் ஆக்சிஜன் பிரித்து கொடுக்கப்பட்டது.

ஆக்சிஜன் பிரித்து தரப்பட்டது
மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள், ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள், மருத்துவமனைகளை ஆலோசித்து அதன்படி மாநிலங்களுக்கு தொடர்ந்து ஆக்சிஜன் வழங்கப்பட்டது. கடந்த மே 8ம் தேதி மட்டும் ஒரே நாளில் 26 மாநிலங்களுக்கு 10,250 மெட்ரிக் டன் ஆக்கிஜன் வழங்கப்பட்டது. அன்று ஆக்சிஜன் தேவை அதிகம் இருந்தது.

ஆக்சிஜன் உற்பத்தி
தேவையை உணர்ந்து இந்தியாவின் மொத்த தினசரி ஆக்சிஜன் உற்பத்தி 5,700 மெட்ரிக் டன்னில் இருந்து 9,690 டன்னாக உயர்த்தப்பட்டது. தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் அளவு குறைக்கப்பட்டது. இதன் காரணமாக மக்களுக்கு தேவையான ஆக்சிஜன் உடனே வழங்கப்பட்டது. Oxygen Demand Aggregation system (ODAS) மற்றும் Oxygen Digital Tracking System (ODTS) என்ற இரண்டு ஆன்லைன் மையங்கள் மூலம் மருத்துவமனைகளின் ஆக்சிஜன் தேவை கண்காணிக்கப்பட்டது.

ரேஷன்
ஆக்சிஜன் இழப்பை குறைக்கும் வகையில் கடந்த வருடமே ஆக்சிஜனை ரேஷன் முறையில் பயன்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகள் கொண்டு வரப்பட்டன. இந்த காலத்தில் மட்டும் 4,02,517 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கப்பட்டு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டன. நாடு முழுக்க 1,222 ஆக்சிஜன் மையங்களுக்கு கையெழுத்து போடப்பட்டது.

சிலிண்டர்கள்
அதோடு நாடு முழுக்க மத்திய அரசு மூலம் 1050 ஆக்சிஜன் சிலிண்டர்கள், சிலிண்டர் ஒன்று 80 லட்சம் ரூபாய் என்ற விலைக்கு வாங்கப்பட்டது. இது முறையாக பிரித்து வழங்கப்பட்டது. இதன் காரணமாக இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் யாரும் மரணம் அடையவில்லை, என்று சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications