பெட்டி பெட்டியா.. கட்டி கட்டியா கிடைக்குது.. கணக்கில்லாமல் இருந்தால் பிரச்சினைதான்.. தமிழிசை அட்டாக்
சென்னை: கணக்கு வழக்கு சரியாக இருந்தால் பிரச்சினை இல்லை.. கணக்கு இல்லாமல் இருந்தால்தான் பிரச்சினை என்று புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள மூத்த அமைச்சர்களைக் குறிவைத்து தொடர்ந்து ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. தொடர்ந்து அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி, எம்.பி ஜெகத்ரட்சகன் என்று மூத்த திமுக தலைவர்கள் குறிவைத்து வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு அரசியல் உள்நோக்கத்துடன் விசாரணை அமைப்புகளை ஏவி விடுவதாகவும் இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று திமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், தான் இன்று அமைச்சர் எ.வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள். இன்று காலை முதலே இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.
வருமானவரி சோதனை: எ.வ.வேலுவுக்கு சொந்தமாக உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள், தொழில் நிறுவனங்களில் ரெய்டு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது நண்பர்கள், உறவினர்கள் என அவருக்குத் தொடர்புடைய பல இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரிகள் எனப் பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது. மேலும், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களிலும் வருமானவரி சோதனை நடந்து வருகிறது. காலை முதலே நடைபெற்று வரும் இந்த வருமான வரித்துறை சோதனை அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெட்டி பெட்டியா கிடைக்கிறது: இந்த நிலையில், தெலுங்கானா மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நேர்மையாக இருந்தால் அச்சம் எதுவும் தேவையில்லை என்றார். தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- இதற்கு முன்பு ரெய்டு போன இடத்தில் ஒன்னுமே கிடைக்கவில்லை.... அப்படி என்றால் தப்பு என்று சொல்லலாம். அரசியல் காரணம் என சொல்லலாம்.
ஆனால் ஏற்கனவே சொன்ன மாதிரி பெட்டி பெட்டியா... கட்டி, கட்டியா கிடைக்கும் போது அப்போ அதில் உண்மை இருக்கு என்றுதானே ஓரளவு அர்த்தம்.. தேடுவதோ விசாரணை செய்வதோ தப்பு என்று எப்படி சொல்ல முடியும். நேர்மையாக கணக்கு வழக்கு எல்லாம் சரியாக இருந்தால்... பிரச்சினை இல்லை. அதைத்தான் சொன்னேன்.. கணக்கு வழக்கு சரியாக இருந்தால், பிரச்சினை இல்லை.. கணக்கு இல்லாமல் இருந்தால்தான் பிரச்சினை.. நேர்மையாக இருக்கும் போது யாரும் அதை சந்தேகப்பட வேண்டியது இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications