Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்பேத்கர் பெயரை 1000 முறை உச்சரித்த திருமாவளவன்! அமித்ஷாவுக்கு எதிராக கண்டன முழக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தது கடும் எதிர்ப்புகளை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமித்ஷாவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். இதில் திருமாவளவன் அம்பேத்கர் பெயரை 1000 முறை உச்சரித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அதானி குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பியிருந்தன. மறுபுறம் அரசியலமைப்பு தின விவாதமும் நடந்தது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசியிருந்த எதிர்க்கட்சிகள், அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை மத்திய அரசு மாற்ற முயற்சிப்பதாக கடுமையாக சாடியிருந்தன. எதிர்க்கட்சி எம்பிக்கள் பேசி முடித்த பின்னர் அவர்களது விமர்சனங்களுக்கு பதிலளித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

thirumavalavan ambedkar amit shah

அப்போது, "அம்பேத்கர், அம்பேத்கர் என்று முழக்கமிடுவது இப்போது ஃபேஷனாகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பாரதிய ஜனதா கட்சி மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் பேச வேண்டும்" என்று பேசியிருந்தார். அமித்ஷாவின் இந்த கருத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் மத்தியில் கடும் எதிர்வினையை கிளப்பியது.

அரசியலமைப்பை உருவாக்கியதே அம்பேத்கர்தான். ஆனால், அவரது பெயரை உச்சரிப்பதற்கு பதில் கடவுள் பெயரை சொல்ல வேண்டும் என்று கூறுகிறாரே? என்று காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமுல், விசிக என அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அமித்ஷாவை கண்டித்து, அம்பேத்கர் பெயரை 1000 முறை உச்சரிக்கும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

இதனையடுத்து சென்னை வள்ளூவர் கோட்டத்தில் இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்றிருந்த திருமாவளவன் உட்பட விசிகவினர் அம்பேத்கர் பெயரை உச்சரித்து, அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

முன்னதாக இது குறித்து விடுக்கப்பட்டிருந்த அறிக்கையில், "அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆவது ஆண்டைக் கொண்டாட்டத்தையொட்டி, நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், ' எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என அம்பேத்கர் பெயரைச் சொல்வது இப்போது ஃபேஷன் ஆக்கிவிட்டது' என்று அம்பேத்கரை இழிவுபடுத்திப் பேசினார். இதனால் நாடெங்கும் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாக ஒரு வார காலத்துக்கும் மேலாக அனைத்து மாவட்டங்களிலும் இரயில் மறியல் போராட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுத் தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்திய அளவில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட ஏராளமான தலித் அமைப்புகள் கூட்டாகச் சேர்ந்து 28ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட தீர்மானித்து அழைப்பு விடுத்துள்ளன. அதேபோல இடதுசாரிக் கட்சிகள் திசம்பர் 30ஆம் தேதி இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதென முடிவு செய்துள்ளன.

இத்தனை போராட்டங்கள் எதிர்ப்புகளுக்குப் பின்னரும் கூட உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காமல் அதனை நியாயப்படுத்தி வருகிறார்.

அரசமைப்புச் சட்டம் குறித்த விவாதத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி ஆளும் பாஜக உறுப்பினர்களும்கூட புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரை எண்ணற்ற முறை உச்சரித்தனர்.

இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பற்றிப் பேசும்போது 'தேசத் தந்தை' காந்தியடிகள் குறித்து எப்படி பேசாமல் இருக்க முடியாதோ அப்படித்தான் அரசமைப்புச் சட்டம் குறித்துப் பேசும்போது
'இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை' புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரை உச்சரிக்காமல் இருக்க முடியாது.

இந்திய விடுதலைப் போராட்டத்திலும் அரசமைப்புச் சட்ட உருவாக்கத்திலும் எவ்வகையிலும் பங்கேற்காதவர்கள் சனாதன- சமூகப் பிரிவினைவாதிகள் ஆவர். அதனால் தான் மகாத்மா காந்தியடிகளின் பெயரும் புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரும் சனாதன சக்திகளுக்குக் குலை நடுக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இந்தியாவில் சுமார் 25 கோடிக்கும் மேலான மக்கள் புரட்சியாளர் அம்பேத்கரைத் தமது குலதெய்வமாகக் கருதிப் போற்றுகின்றனர். இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் திருவுருவச் சிலைகள் அமைக்கப்பட்டு இருப்பதும் புரட்சியாளர் அம்பேத்கருக்குத் தான்.

இந்தியாவைப் போல ஜனநாயக அரசியல் முறையை ஏற்றுக்கொண்ட பல நாடுகள் இன்று துண்டு துண்டாகிச் சிதறுண்டு போய்விட்டன. ஆனால் சனாதன- சமூகப் பிரிவினைவாதிகளின் சதிகளையும் மீறி இந்தியா ஒரே நாடாக இருக்கிறது என்றால் அதற்கு புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்துத் தந்த அரசமைப்புச் சட்டமே அடிப்படையாகும்.

1950 ஆம் ஆண்டிலிருந்தே அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளாத சனாதன சக்திகள்- சமூகப் பிரிவினைவாதிகள் அதனை மாற்றுவதற்கு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் முயற்சி செய்தார்கள். அப்போது எழுந்த எதிர்ப்பின் காரணமாக அதைக் கைவிட்டார்கள். இப்போதும் அவர்களது 'இந்து ராச்சிய' கனவை நனவாக்குவதற்கு மிகப்பெரும் தடையாக இருப்பது அரசமைப்புச் சட்டம் தான். அதனால் அதனைக் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போகச் செய்யும் வேலையில் இப்போது அவர்கள் இறங்கி உள்ளனர்.

ஒருபுறம், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளைப் பலவீனப்படுத்தும் விதமாக சட்டத் திருத்தங்களைக் கொண்டு வருவது. இன்னொருபுறம் நீதித்துறையைப் பயன்படுத்தி அரசமைப்புச் சட்டத்துக்கு புதிய விளக்கங்களைத் தந்து அதை நீர்த்துப் போகச் செய்வது என்ற இருமுனைத் தாக்குதல் இப்போது சனாதன சக்திகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் இந்தியா கூட்டணி கட்சிகள் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் என்று முழங்குவதோடு, புரட்சியாளர் அம்பேத்கரையும் உயர்த்திப் பிடிக்கின்றன. இது இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை தந்துள்ளது. அதன் காரணமாகத்தான் கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் கொண்ட சனாதனப் பிரிவினைவாதிகள் அம்பேத்கரை இழிவுபடுத்தும் வேலையில் இறங்கியுள்ளனர். அதன் ஒரு வெளிப்பாடு தான் அமித்ஷாவின் பேச்சாகும்.

புரட்சியாளர் அம்பேத்கர் ஒரு சமூகத்தின் தலைவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அரசமைப்புச் சட்டம் என்னும் அடித்தளத்தை அமைத்துத் தந்த மாபெரும் தலைவர். அவரை இழிவு படுத்துவது அரசமைப்புச் சட்டத்தை இழிவு படுத்துவதற்குச் சமம். புரட்சியாளர் அம்பேத்கரை இழிவு படுத்திய அமித்ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, திசம்பர் 28 சனிக்கிழமையன்று மாலை 4.00 மணியளவில் சென்னை- வள்ளுவர் கோட்டம் அருகில் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்" என்று தெரிவித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+