சவுக்கு சங்கர் வீட்டில் மனிதக் கழிவு வீச்சு! அநாகரீகத்தின் உச்சம்! திருமாவளவன் கண்டனம்
சென்னை: சவுக்கு சங்கரின் வீட்டில் சாக்கடை, மனிதக் கழிவுகளை கொட்டியது அநாகரீகத்தின் உச்சம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தொல் திருமாவளவன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சவுக்கு சங்கரின் இல்லத்தில் நுழைந்து அவரது தாயாரை அச்சுறுத்தியதுடன், அங்கே மனிதக் கழிவு உள்ளிட்ட சாக்கடை கழிவுகளைக் கொட்டியுள்ள குரூரச் செயல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

தூய்மைப் பணியாளர்களைச் சவுக்கு சங்கர் இழிவுப்படுத்திப் பேசியதால்தான், அதன் எதிர்வினையாக இது நடந்திருக்கலாமென சொல்லப்படுகிறது.
எனினும், இது அநாகரித்தின் உச்சம். அருவருப்பான இந்த நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
திமுக அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதாகவே இந்த
இழிசெயல் அமைந்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு இதில் தொடர்புடையவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். இவ்வாறு தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சவுக்கு சங்கர் தூய்மை பணியாளர்களை அவதூறாக பேசி வீடியோ போட்டதாக கூறிய 50-க்கும் மேற்பட்டோர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு அவரது வீட்டில் மனிதக் கழிவுகளை ஊற்றினர்.
இந்த சம்பவம் குறித்து சவுக்கு சங்கர் கூறியிருப்பதாவது: இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: இன்று காலை 9.30 மணி முதல் துப்புரவு தொழிலாளர்கள் என கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் என் வீட்டின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் என் தாயாரின் போனை பிடுங்கி வீடியோ காலில் பேசியபோது பதிவு செய்தது. இப்போது மணி 11.43. இந்தத் தருணம் வரை தாக்குதல் நடத்த வந்தவர்கள் அதே இடத்தில் இருக்கின்றனர். காவல்துறையினர் என்னை வீட்டுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர்.
நான் வெளியே கிளம்பிய 5 நிமிடத்திற்கெல்லாம் இந்த கும்பல் எங்கள் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை இடங்களிலும் அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடை நீரையும் மலத்தையும் கொட்டினர்.
என்ன நடந்தது என என் தாயாருக்கு போன் செய்த போது அந்த போனை வாங்கி வீடியோ காலில் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து காவல் கட்டுப்பாடு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தேன். ஒரே ஒரு உதவி ஆய்வாளரும் ஒரு காவலரும் மட்டும் வந்தனர். கொலை மிரட்டல் 9.30 மணி முதல் என் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்கள் நகரவே இல்லை. அந்த இடத்திற்கு சென்ற ஊடகங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். யாருடைய தூண்டுதலின் பேரில் இந்த தாக்குதல் நடைபெறுகிறது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை என அந்த பதிவில் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications