மலம் திணிப்பது.. பலாத்காரம்.. இதை வீரதீர செயலாக காட்டிக்கொள்வது தீவிர மனநோய் - திருமாவளவன் ஆவேசம்
சென்னை: மணிப்பூர் மாநிலத்தில் குக்கி-ஜோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமா ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம், நாடு முழுவதும் பெரும் போராட்டங்களை கிளப்பியுள்ளது. இந்நிலையில், இது போன்ற வன்முறைகளை வீரதீர செயலாக காட்டிக்கொள்வது தீவிர மனநோய் என்று விசிக தலைவர் திருமாவளவன் எம்பி விமர்சித்துள்ளார்.
மணிப்பூரில் சிறுபான்மையினராக இருக்கும் குக்கி, ஜோ, நாகா உள்ளிட்ட பழங்குடி மக்கள் அங்குள்ள மலை பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மலைப்பகுதி மற்றும் அதையொட்டியுள்ள சமவெளி பகுதிகளில் இவர்களை தவிர வேறு யாரும் நிலங்களை வாங்கவோ விற்கவோ முடியாது. இப்படி இருக்கையில் அங்கு பெரும்பான்மையாக இருக்கும் மைத்தேயி/மெய்டெய் மக்கள் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

மைத்தேயி/மெய்டெய் மக்களுக்குதான் மாநிலத்தில் அதிக அளவுக்கு வாக்குகள் இருக்கிறது. எனவே இதனை கவனித்த பாஜக அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புக்கொண்டது. இதையே தனது தேர்தல் வாக்குறுதியாக வைத்து சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. எதிர்பார்த்ததை போலவே பாஜக இந்த தேர்தலில் வெற்றியும் பெற்றது. இதனையடுத்து மைத்தேயி/மெய்டெய் மக்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
நீதிமன்றமும் இதற்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் குக்கி உள்ளிட்ட பழங்குடி மக்கள் அதிருப்பதியடைந்தனர். மைத்தேயி/மெய்டெய் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தால் தங்கள் உரிமைகளை இழக்க நேரிடும் என்று விமர்சித்து இப்பழங்குடி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்நிலையில், இதற்கு எதிராக மைத்தேயி/மெய்டெய் மக்கள் ஊர்வலம் பேரணி நடத்தினர். இது ஒரு கட்டத்தில் மோதலாக வெடித்தது.
மோதலில் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குப்படி 160க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபொல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக 5,889 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 144 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் சுமார் 36,000 பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், 40 இந்திய காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரிகள் மற்றும் 20 மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனினும், இப்போது வரை மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. 300-க்கும் மேற்பட்ட முகாம்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கியுள்ளனர். 350 தேவாலயங்களும், சுமார் 20 கோயில்களும் பிற வழிபாட்டுத்தலங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் கடந்த மே 4ம் தேதி குக்கி மற்றும் ஜோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் வன்முறையாளர்களால் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பான வீடியோ நேற்று வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
கடந்த 3 மாதங்களாக நடந்து வரும் இந்த வன்முறை குறித்து பிரதமர் பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், இத்தனை நாட்கள் மவுனம் காத்த பிரதமர், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று நாடாளுமன்றத்திற்கு வெளியில் இது குறித்து பேசினார். இருப்பினும் அவர் நாடாளுமன்றத்திற்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் பழங்குடி பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன. அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இது குறித்து, "இம்மண்ணில் தலித்துகளுக்கும் பழங்குடிகளுக்கும் எதிராகக் காலம் காலமாகத் தலைமுறை தலைமுறையாக இத்தகைய கேவலமான ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன. இந்த இழிசெயல்களைத் தங்களின் சாதிப் பெருமைகளென இவர்கள் நம்புவதுதான் இழிவினும் இழிவான பித்துக்குளித்தனமாகும்.
அப்பாவிகளை வதைத்துப் படுகொலை செய்வது, வாயில் மலம் திணிப்பது, சிறுநீர் கழிப்பது, குடிசைகளைக் கொளுத்துவது, உடைமைகளைச் சேதப்படுத்துவது, பெண்களை அம்மணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச்செல்வது, கூட்டுப் பாலியல் வல்லுறவு கொள்வது, கொள்ளையடிப்பது, ஆணவக் கொலைகள் செய்வது என விவரிக்க இயலாத வன்கொடுமைகளைச் செய்து அவற்றை வீரதீர செயல்களெனப் போலியாய்க் கர்வம் கொள்வதுதான் இவர்களின் மரபணுக்களில் கொட்டமடிக்கும் மனநோய் அவலத்தின் உச்சமாகும்" என ட்வீட் செய்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications