"திருமாவளவன் மாத்தி மாத்தி பேசுறாரு.." தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா அட்டாக்.. என்ன நடந்தது?
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் மாற்றி மாற்றி பேசி வருவதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். திருமாவளவனின் அரசியலால் தலித் மக்கள் அதிருப்தி அடைவதாக கூறியுள்ள ஆதவ் அர்ஜுனா, அவரை நாங்கள் அட்டாக் செய்யவில்லை என்றும் கூறி இருக்கிறார். காவல்துறைக்கு எதிராக கடுமையாக பேசிவிட்டு, அடுத்த சில நாட்களிலேயே திருமாவளவன் இது சமூகநீதி அரசு என்று பேசுவது ஏற்புடையதல்ல என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஓராண்டில் நடக்கவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே கோவையில் பூத் கமிட்டி மண்டல மாநாடு முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக மதுரை மற்றும் நெல்லையில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்த தவெக மும்முரமாக உள்ளது. அதற்கேற்ப மண்டல அளவிலான பணிகளை மேற்கொள்ளவும், தொண்டர்களை தயார் செய்யவும் பணிகளை மேற்கொள்ள மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தவெக தனித்துப் போட்டி
அதேபோல் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் இதுவரை எந்த கட்சியும் கூட்டணி அமைக்கவில்லை. திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லாத சூழலில், அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இதனால் விரைவில் பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் அதிமுக உடனான கூட்டணியை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அடுத்த தேர்தலிலும் தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ளார்.
திருமாவளவன் மீது அட்டாக்
இதனால் தவெகவும் தனித்து போட்டியிடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. தவெக தரப்பில் விசிக உடன் இணைந்து போட்டியிட பல்வேறு தருணங்களிலும் வெளிப்படையாகவே விருப்பம் காட்டப்பட்டு வருகிறது. அதற்கேற்ப விசிகவில் இருந்து வந்து, தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா மூலமாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் திருமாவளவன் ஒத்துக் கொள்ளாத நிலையில், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா திருமாவளவனை அட்டாக் செய்ய தொடங்கி இருக்கிறார்.
திருமா பற்றி ஆதவ் அர்ஜுனா
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து ஆதவ் அர்ஜுனா பேசுகையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் ஒரு பிரச்சனை வருகிறது. அண்ணன் திருமாவளவன் அதற்காக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கிறார். போராட்டத்திற்கு பின் காவல்துறையை அட்டாக் செய்வார். ஆனால் அந்த காவல்துறையை வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் எந்த கோரிக்கையையும் வைப்பதில்லை. போராட்டம் முடிந்து 3 நாட்களில், இது சமூகநீதிக்கான அரசு என்று பேச தொடங்கிவிடுகிறார். இப்படிதான் மாற்றி மாற்றி பேசுகிறார்.
அட்டாக் செய்கிறோமா?
இதனால் தலித் மக்கள் கடுமையான அதிருப்தி அடைகிறார்கள். நாங்கள் ஒன்றும் திருமாவளவனை அட்டாக் செய்யவில்லை. வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக திருமாவளவன் நேரடியாக ஆய்வு செய்தார். மக்களை சந்தித்ததோடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து முறையிட்டார். ஆனால் போலீஸ் அறிக்கையில், பாதிக்கப்பட்டவர்களே தண்ணீரில் மலம் கலந்ததாக சொல்லப்படுகிறது. இதன்பின் வேங்கைவயல் செல்ல திருமாவளவன் செல்ல முயற்சித்த போது, அவர் தடுத்து நிறுத்தப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications