Armstrong: ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி உயிருக்கு ஆபத்து! திமுக கூட்டணியில் இருந்து வந்த எச்சரிக்கை மணி!
சென்னை: படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியின் உயிருக்கு ஆபத்து என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, கணவரின் படுகொலைக்கு நீதி வேண்டி அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். தேர்தலில் போட்டியிட்டு நீதி பெற அவர் முனைப்புக் காட்டும் நிலையில், அவருக்கு நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் ஆதரவு பெரும் பேசுபொருளாகியுள்ளது.

அதேசமயம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பொற்கொடியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக வெளிப்படையாக எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதும் நிகழ்ந்தது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு சிபிஐக்கு மாற்றப்பட்டது. எனினும், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை பெற்றது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.
இந்நிலையில், மறைந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, தற்போது அதிமுக கூட்டணியில் இணைந்து திருவிக நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
இத்தேர்தலில் தனது கணவர் கொலையாளிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுவதாக பொற்கொடி பகிரங்கமாக அறிவித்துள்ளார். அவர் பிரச்சாரத்திற்குச் செல்லும் இடங்களிலெல்லாம் அமோக வரவேற்பு கிடைப்பதாகவும், பா. ரஞ்சித் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் அவருக்கு ஆதரவு நல்குவதாகவும் கூறப்படுகிறது.
பொற்கொடிக்கு கிடைத்து வரும் இந்த மகத்தான ஆதரவு, திமுக கூட்டணிக்கு கடும் சவாலாக பார்க்கப்படுகிறது. இதனால், தனக்கு பல்வேறு மட்டங்களில் நெருக்கடி தரப்படுவதாக பொற்கொடி முன்னர் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில்தான், பொற்கொடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை திருமாவளவன் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
"கணவர் இறந்தவுடன் பொற்கொடி வீட்டிற்குள் முடங்கி விடாமல் துணிச்சலாக பொது வாழ்விற்கு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இது போன்று பெண்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். தொடர்ந்து கணவர் இறப்புக்கு நீதி கோரி போராடிவரும் பெற்கொடியையும், அவரது அரசியல் வருகையையும் நாங்கள் ஆதரிக்கிறோம். அவருக்கு பாதுகாப்பு தேவை.
அவர் துணிச்சலுடன் பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளதை நான் பாராட்டுகிறேன். அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. மேலும், அரசியலில் அவருக்கு ஒரு இடமும் தேவைப்படுகிறது. அதிமுக அவருக்கு அந்த இடத்தை வழங்கியிருந்தால், அதை நாங்கள் அதை வரவேற்கிறோம்," என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
எதிர்க் கூட்டணியைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், பொற்கொடியின் உயிருக்கு உள்ள ஆபத்தை திருமாவளவன் சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளார். இந்த நிலையில், அனைத்து கூட்டணிக் கட்சிகளும், காவல்துறை பொற்கொடிக்கு போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. எந்தவித அசம்பாவிதங்கள் மூலமும் அச்சுறுத்தல்கள் மூலமும் பொற்கொடியை களத்திலிருந்து பின்வாங்க வைக்க முடியும் என்ற திமுகவினரின் எண்ணம் ஈடேறாது என பொற்கொடியின் ஆதரவாளர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications