WAITING IS OVER.. கோட்டைக் கதவை விஜய்க்கு திறந்து விட்ட திருமா! ஆதவ் கையில் லெட்டர்! இது தான் காரணம்
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கான சூழல் உருவாகி இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு தர திருமாவளவன் ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது. ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்ற தகவலால் திருமாவளவன் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக சொல்கின்றனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், பெரும்பான்மை எண்ணிக்கையை எட்ட முடியாமல் கடந்த சில நாட்களாக கடுமையான அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தது.
ஆட்சி அமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால், ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் இதுவரை தவெகவை ஆட்சியமைக்க அழைக்காமல் இருந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.

விஜய்
பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தன. இதனால் தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்தது. ஆனால் இன்னும் இரண்டு உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்பட்டதால், தமிழக அரசியலின் முழு கவனமும் விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் முடிவின் மீது திரும்பியது.
இடதுசாரிகள்
முதலில் இடதுசாரிகள் எடுக்கும் முடிவையே விசிகவும் ஆதரிக்கும் என்று திருமாவளவன் தெரிவித்திருந்தார். இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக அவர் தனது இறுதி முடிவை அறிவிக்காமல் இருந்து வந்தது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியது. ஒருபக்கம் தவெக நிர்வாகிகள் தொடர்ந்து விசிக தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். மற்றொரு பக்கம் திமுக தலைமையும் விசிகவை கூட்டணியில் தக்கவைக்க முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகின.
விசிக
இதற்கிடையே தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்ற தகவல்கள் பரவத் தொடங்கின. எந்தக் கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை நீடித்தால், ஆளுநர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பக்கூடும் என்ற விவாதம் தீவிரமானது. இந்த சூழல்தான் விசிக முடிவில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க திருமாவளவன் ஒப்புக்கொண்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆதரவு கடிதம் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆதரவு உறுதியாகும் பட்சத்தில், தவெகவின் எண்ணிக்கை பெரும்பான்மையை எட்டும் நிலை உருவாகும்.
பெரும்பான்மை
இதனால் விஜய் தலைமையிலான அரசு அமைவதற்கான வாய்ப்பு தற்போது அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. கடந்த சில நாட்களாக ஆளுநரை மூன்று முறை சந்தித்தும் அழைப்பு கிடைக்காமல் இருந்த விஜய், தற்போது பெரும்பான்மை ஆதரவை உறுதிப்படுத்தும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆளுநர் மாளிகையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனை நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்
மற்றொரு பக்கம் அதிமுகவும் தொடர்ந்து அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வந்தது. புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னைக்கு திரும்பியதும், எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனைகளும் அரசியல் பரபரப்பை அதிகரித்திருந்தன. ஆனால் தற்போது விசிக ஆதரவு தவெகவுக்கு கிடைத்ததாக கூறப்படுவதால், ஆட்சிக்கு உரிமை கோரும் முடிவை எடப்பாடி பழனிசாமி கைவிட்டு விட்டார் எனவும், அதனால் ஆட்சி அமைக்கப் போகும் கட்சிக்கு வாழ்த்துகள் என அவர்கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநர் அழைப்பாரா?
இந்நிலையில் தமிழக அரசியலில் அடுத்த சில மணி நேரங்கள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன. ஆளுநர் விஜயை ஆட்சியமைக்க அழைப்பாரா, எப்போது பதவியேற்பு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.














Click it and Unblock the Notifications