திருப்பரங்குன்றத்தில் முருகன் அருளால் தீபம் ஏற்றப்படும்.. மதுரையில் பிரேமலதா பிரசாரம்!
மதுரை: முருகன் அருளால் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும் என்று மதுரையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த் கூறினார். மேலும் முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை நிச்சயம் உறுதிப்படுத்துவார் என்று தான் சொன்னேன்.. அவரிடம் நாம் உரிமையோடு பேச முடியும் என்று தான் சொன்னேன்.. ஆனால் இதையெல்லாம் புரிஞ்சுகொள்ளாமல் தவறான செய்தி போடுபவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் பிரேமலதா கூறினார்.
ஸ்டாலின் முன்னிலையிலேயே பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசியதாக சோஷியல் மீடியாக்களில் வீடியோ பரவியது. மேலும் துரந்தர் பிரேமலதா என்று தவெக ஆதவ் அர்ஜுனாவும் பேசியிருந்த நிலையில் இதற்கு பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும்
திருப்பரங்குன்றத்தில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆனது. எய்ம்ஸ் வரும் எய்ம்ஸ் வரும் என்று தான் சொல்கிறார்கள் ஆனால் வந்தபாடில்லை. எப்போதான் எய்ம்ஸ் மருத்துவமனை முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என்று தெரியவில்லை.
ஆனால் நம் வேட்பாளர் வெற்றி பெற்றால் சட்டமன்றத்தில் பேசி எய்ம்ஸ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் மெட்ரோ வரும் என்று சொன்னார்கள். ஆனால் அதுவும் வருவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்தது போல் இல்லை. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை பற்றி பேசுகிறார்களே தவிர.. தொகுதியில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டுக்கிறார்கள்.
உரிமையோடு பேச முடியும் என்று தான் சொன்னேன்
இங்க மக்கள் நல்லா இருக்க வேண்டும் என்றால் தொகுதி நல்லா இருக்க வேண்டும். எனவே இங்கே நிச்சயமாக முருகன் அருளால் திருப்பரங்குன்றத்தில் தீபமும் ஏற்றப்படும். இங்கு இருக்கின்ற வாழ்க்கைத் தரமும் ஏற்றம் பெறும். நம் வேட்பாளர் கிருத்திகா இங்கே இருக்கும் மக்கள் வாழ்க்கையில் தீபம் ஏற்றுவார்.
அண்ணன் ஸ்டாலின் அவர்கள் 2வது முறையாக முதல்வராக வரப்போவது உறுதி.. திமுக 7 வது முறையாக ஆட்சி அமைக்கப்போவது உறுதி.. அப்படி இருக்கும் போது பெண்களுக்கு உரிய பாதுகாப்பை நிச்சயம் உறுதிப்படுத்துவார் என்று தான் சொன்னேன்.. அவரிடம் நாம் உரிமையோடு பேச முடியும் என்று தான் சொன்னேன்.. இதையெல்லாம் புரிஞ்சுகொள்ளாமல் தவறான செய்தி போடுபவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
பெண்களின் பாதுகாவலர் ஸ்டாலின் தான்
ஆட்சியாளர்களை தப்பா சொன்னது போல திரித்து போடாதீங்க.. தமிழ்நாடு மக்களுக்கு தெரியும். நான் என்ன சொன்னேன் என்று. இப்போதும் சொல்றேன்.. திமுக தலைவர் ஸ்டாலின் தான் மீண்டும் ஆட்சி அமைப்பார்.. ஒட்டுமொத்த பெண்களின் பாதுகாவலர் அண்ணன் ஸ்டாலின் தான்.. மாற்றுக்கருத்து இல்லை. எது என்றாலும் அண்ணனிடம் உரிமையாக பேசுவோம் என்று தான் நான் சொன்னேன்.. ஆயிரம் கை கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறையப்போவதில்லை.
எனவே இந்த தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்" என்று பேசினார். திமுக கூட்டணியி இருந்துகொண்டே திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும் என பிரேமலதா பேசியிருப்பது பேசுபொருள் ஆகியுள்ளது. ஏற்கனவே திருமாவளவன் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் போது பிரேமலதா எழுந்திருக்காமல் அமர்ந்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதன்பிற்கு முதல்வர் முன்னிலையே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போல் பேசியதாக ஆதவ் அர்ஜுனாவும் திமுகவில் துரந்தர் பிரேமலதா என்றும் பேசியிருந்தார். இந்த நிலையில் பிரேமலதா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும் என பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.














Click it and Unblock the Notifications