கூட்டணியிலிருந்தபடி "எதிரிகள் வாய்க்கு அவல் போடாதீர்கள்.." சிபிஎம் பாலகிருஷ்ணனுக்கு முரசொலி அட்வைஸ்
சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அரசின் செயல்பாடுகளை விமர்சித்து அறிக்கை வெளியிடுவது, எதிரிகள் வாய்க்கு அவலாகிவிடும் என்று முரசொலியில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தி இருந்தார். இதற்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
அதில், மக்கள் தலையில் இந்த மின் கட்டண உயர்வை ஏற்றிட வேண்டும் என்று கழக அரசு விரும்பவில்லை. தவிர்க்க இயலாத நிலையில், மனதில் நிறைய சங்கடங்களை சுமந்து கனத்த இதயத்தோடு தான் இது போன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டியுள்ளது.

கேரளாவில் மின் கட்டணம் உயர்வு
மார்க்சிஸ்ட் ஆளும் கேரளத்தில் கூட மின் கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. தோழர் பாலகிருஷ்ணனுக்கு அது தெரியாமல் இருக்காது. எந்த மக்கள் நல அரசாக இருந்தாலும் சில சூழ்நிலை காரணமாக இது போன்ற கட்டண உயர்வுகளை அறிவிக்க வேண்டிய நிலை உருவாகி விடுகிறது.

கூட்டணியை முறிக்க முயற்சி
தமிழகத்தில் திமுக கூட்டணியை முறித்துவிட முயற்சி நடப்பதாகவும், கூட்டணியை முறித்துவிட சந்தர்ப்பம் கிடைக்காதா என காத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். மத்திய பாஜக அரசு போல ஏழைகளை நசுக்கி, பணம் படைத்தோரை போஷிக்கும் வரி விதிப்புக் கொள்கையல்ல திமுகவின் கொள்கை. அரசியல் நடப்புகளை பல ஆண்டு காலங்களாக கூர்ந்து கவனித்திடும் தோழர் பாலகிருஷ்ணன் இதை நிச்சயம் உணர்வார்.

எச்சரிக்கை தேவை
நாம் விடும் அறிக்கை பூமராங் போல பல நேரங்களில் நம்மை நோக்கித் திரும்பிவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கை தேவை. திமுக கூட்டணிக் கட்சியாயிற்றே, இந்த மின்கட்டண உயர்வால் அந்தக் கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில் தோழர் பாலகிருஷ்ணன் இத்தகைய அறிக்கையை வெளியிட்டிருக்கலாம்.

எதிரிகள் வாய்க்கு அவலாகி விடக்கூடாது
ஆனால் கட்சிக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்குமிடையே ‘சிண்டு முடிந்து', இந்த வலிமை மிகு கூட்டணியை முறித்துவிட சந்தர்ப்பம் கிடைக்காதா என நாக்கைத் தொங்கவிட்டு காத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் என்பதை தோழர் பாலகிருஷ்ணன் அறியாதவர் அல்ல. பேனைப் பெருமாளாக்கி அதனை பெத்த பெருமாளாக்கிடு வதில் வல்லமை வாய்ந்த கூட்டம் அது.
வெறும் வாயை மென்று சுவைத்து ஜீரணித்து சுகம் காணும் அந்த வஞ்சகக் கூட்டத்தின் வாய்க்கு அவல் கிடைத்தால் என்னவாகும்? ஆகையால் நாம் விடும் அறிக்கைகள் எதிரிகள் வாய்க்கு அவலாகி விடாது எச்சரிக்கையாகச் செயல்படுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications