அடுத்த ஒரு ஆண்டிற்குள் கல்யாணம் இருக்கா? இப்போ தங்கம் வாங்குவது தான் பெஸ்ட்! ஆனந்த் சீனிவாசன் நறுக்
சென்னை: தங்கத்தின் விலை இப்போது மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இது தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் ஆனந்த் சீனிவாசன்.. இவர் வீட்டு சேமிப்பு தொடங்கி சர்வதேச பொருளாதாரம் வரை பல விஷயங்கள் குறித்து தொடர்ச்சியாகப் பேசி வருகிறார்.
இவர் பேசும் கருத்துகள் புதியது இல்லை என்ற போதிலும், அதை அனைத்து தரப்பும் மக்களும் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார். அதுதான் இவரது சிறப்பு.

ஆனந்த் சீனிவாசன்: இந்த ஆனந்த் சீனிவாசன் எப்போதும் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் தொடர்ந்து கூறி வருவார். பணக்கார வர்க்கத்தினருக்குத் தங்கம் தேவையில்லை என்ற போதிலும், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்குத் தங்கம் ரொம்பவே முக்கியம் என்பதை அவர் தொடர்ந்து கூறி வருகிறார். ஏனென்றால் எதாவது ஆபத்து என்றால் பணக்காரர்களுக்குத் தப்பிக்க ஆயிரம் வழி இருக்கும். ஆனால், நடுத்தர வர்க்கத்தினருக்கு இதுபோன்ற நேரங்களில் தங்கம் மட்டுமே காப்பாற்றும்.
எங்குச் சென்றாலும் நம்மால் தங்கத்தை விற்க முடியும் என்பதால் அதையே ஆபத்தான நேரங்களில் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, கொரோனா காலத்தில் கூட பல ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குத் தங்கமே பேருதவியாக இருந்தது அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாகவே ஒவ்வொரு குடும்பத்திடமும் குறைந்தது 400 கிராம் தங்கம் வேண்டும் என்று ஆனந்த் சீனிவாசன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
அதிகரிக்கிறது: கடந்த சில காலமாகத் தங்கத்தின் விலை பெரியளவில் அதிகரிக்காமல் இருந்தது. இதனிடையே இப்போது மீண்டும் தங்கத்தின் விலை மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே வரும் காலத்தில் தங்கம் விலை குறையுமா என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தங்கம் விலை மெல்ல ஏற ஆரம்பித்துள்ளது. என்னை பொறுத்தவரைத் தங்கத்தின் விலை இதற்கு மேல் இறங்காது என்றே நினைக்கிறேன்.
ஏனென்றால் அமெரிக்கா மத்திய வங்கி இதன் பிறகு இரண்டு முறை வட்டியை உயர்த்திவிட்டு, கொஞ்சக் காலம் காத்திருக்கும். எனவே, தங்கத்தின் விலை கிட்டதட்ட இப்படியே தான் இருக்கும். கீழே இதற்கு மேல் இறங்காது. அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்துவதை நிறுத்திவிட்டால் உடனடியாக தங்கம் விலை மளமளவென அதிகரிக்கத் தொடங்கிவிடும்.. எனவே, தங்கம் இப்போது யாருக்கெல்லாம் தேவையோ அவர்கள் இப்போது வாங்கலாம்.

பெஸ்ட் இதுதான்: அடுத்த 12 மாதங்களில் திருமணம் இருந்தால் இப்போது தங்கம் வாங்குவது சரியாக இருக்கும். இது நமக்குக் கிடைக்கும் பெஸ்டான ரேட்டாக இருக்கும். தங்கம் என்பதில் முதலீடு செய்ய மக்கள் விரும்புகின்றனர். தங்கம் நமக்கு உண்மையான லாபத்தைக் கொடுக்கும். கொரோனாவுக்கு முன்பு ஒரு கிராம் தங்கம் ஒரு கிராம் 3500 என்று இருந்தது. இப்போது அது 6000ஐ நெருங்குகிறது. இந்தக் காலகட்டத்தில் தங்கம் வாங்கிய பலருக்கும் நல்ல லாபம்.
ரூபாய் மதிப்பைப் பாதுகாக்கத் தவறியதே காரணம். சர்வதேச அளவில் பார்க்கும் போது, டாலருடன் ஒப்பிடும் போது தங்கத்தின் விலை பெரியளவில் அதிகரிக்கவில்லை. ஆனால், ரூபாயில் இவ்வளவு பெரிய ஏற்றம் கண்டுள்ளது என்றால் அதற்கு ரூபாய் மதிப்பைப் பாதுகாக்கத் தவறியதே காரணம். மக்கள் எதில் மதிப்பு இருக்கிறதோ.. எது தங்களுக்கு நல்ல ரிட்டர்னை தருமே அதில் தான் முதலீடு செய்வார்கள். அரசு என்னதான் தடுத்தாலும் இது நடந்து கொண்டு தான் இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications