உயிருடன் பிரபாகரன்.. பாஜகவின் பக்கா அரசியல் ஸ்கெட்ச் இதுதானே.. நெடுமாறனுக்கு திருமாவளவன் நோஸ்கட்!
பாஜகவின் நலனுக்காகவே பிரபாகரன் உயிருடன் இருப்பதாக சொல்கிறார் பழ.நெடுமாறன் என்கிறார் தொல்.திருமாவளவன் எம்.பி.
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் பாஜகதான் இருக்கிறது என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி.
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அண்மையில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அறிவித்திருந்தார். மேலும் சர்வதேசச் சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பி இருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும் ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம். தமிழீழ மக்களின் விடியலுக்கானத் திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும் உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம். விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்த கால கட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும் இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம். இந்த முக்கியமான கால கட்டத்தில் தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழ்நாட்டு மக்களும் ஒன்றுபட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு துணை நிற்குமாறு வேண்டுக் கொள்கிறோம் என கூறியிருந்தார்.

அதேபோல் ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன், தற்போதும் பிரபாகரன் குறித்து நெடுமாறனுக்கு நம்பகமான தகவல் கிடைத்திருக்கலாம். அதனால் அவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என அறிவித்திருக்கலாம். பிரபாகரனுக்கு நெடுமாறன் ஒரு தந்தையைப் போன்றவர். பிரபாகரன் தனது 19வது வயதில் நெடுமாறனின் மடியில் தவழ்ந்தவர். பிரபாகரனுக்கும் விடுதலைப் புலிகளின் தளபதிகளுக்கும் காவலரணாக இருந்தவர் நெடுமாறன். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், நெடுமாறனை தந்தை நிலையில்தான் மரியாதை செலுத்தினார். அப்படியான நெடுமாறன் ஒரு அறிவிப்பை வெளியிடும் போது அதை நம்பித்தான் ஆக வேண்டும் என கூறியிருந்தார்.
இதனை நிராகரித்து பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்பி, பிரபாகரன் இறந்துவிட்டார் என இலங்கை சொல்வதை நாம் நம்பவில்லை. அப்படி நம்பாத காரணத்தால்தான் பிரபாகரன் இறந்துவிட்டார் என நாம் எங்கேயும் இதுவரை சொல்லவும் இல்லை. இப்பதான் அதைப் பற்றி நாம் பேச வேண்டிய நிலை வருகிறது. பிரபாகரன் இறந்துவிட்டார் என நாம் கருதி இருந்தால் வீரவணக்க கூட்டங்களை நடத்தி இருப்போம். ஆனால் அதற்குப் பிறகு ஏராளமானவர்கள் இலங்கையில் இருந்து தப்பி வந்தார்கள். நிறைய தளபதிகளின் குடும்பத்தினர் வந்தனர். அவர்களை சந்திக்கிற வாய்ப்பும் கிடைத்தது. என்னால் ஆன உதவிகளை அவர்களுக்கு செய்யவும் முடிந்தது. அவர்கள் சொன்னதில் இருந்து பிரபாகரன் இல்லை என்கிற எண்ணம்தான் எனக்கு வலுப்பட்டது. ஆனாலும் பிரபாகரன் இல்லை என எங்கும் நான் சொன்னதும் இல்லை. இப்ப நான் சொல்கிறேன். பிரபாகரன் இல்லை. பிரபாகரன் இல்லை என நான் நம்புகிறேன். அண்ணன் பிரபாகரன் இல்லை என நான் நம்புகிறேன்.இது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை. இது என்னுடைய தனிப்பட்ட உணர்வு என தெரிவித்திருந்தார்.
தற்போது பிரபாகரன் உயிருடன் இருப்பதன் பின்னணியில் பாஜக இருப்பதாக விவரித்துள்ளார் திருமாவளவன். இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு திருமாவளவன் கூறியதாவது: நெடுமாறனின் அறிவிப்பில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது முக்கியமான செய்தி அல்ல. நெடுமாறன் சொல்ல வந்த செய்தி இலங்கையில் சீனாவின் ஆக்கிரமிப்பு இந்தியாவுக்கு ஆபத்து. அவர்களை அப்புறப்படுத்த வேண்டும். இது இந்தியாவுக்கோ உலக நாடுகளுக்கோ தெரியாத ஒன்றா? ஆனால் ஏன் நெடுமாறன் சொல்கிறார் எனில் இந்திய அரசாங்கம் இலங்கை பிரச்சனையில் தலையிட்டால், சீனா ஆக்கிரமிப்பை அகற்றினால் ஈழத் தமிழருக்கு பயன் தரும் என்கிற தோற்றத்தை உருவாக்குவது. ஈழத் தமிழர் நலனுக்காக இந்திய அரசு தலையிட்டு சிங்கள அரசுக்கு ஒரு அச்சுறுத்தலை தர வேண்டும் என்கிற செய்தி, தமிழ்நாட்டு தமிழருக்கும் உலகத் தமிழருக்கும் சொல்லப்படுகிறது. அதாவது நெடுமாறன் சொல்வது சரி.. உடனே இலங்கையில் இந்தியா தலையிட வேண்டும் என மத்திய அரசிடம் நாம் கோரிக்கை வைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அப்படி செய்கிற போது மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு, தமிழ்நாட்டில் எதிர்ப்பு குறையும். தமிழ்நாட்டில் பாஜக அரசியல் செய்ய விரும்புகிறது. ஆனால் பாஜகவுக்கு எதிர்ப்பு இங்கு இருக்கிறது. இந்த எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும். அதற்கான ஒரு உத்திதான் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற பழ.நெடுமாறனின் அறிவிப்பு. இது யூகமானது அல்ல. இதுதான் நுட்பமான செய்தி. இந்திய அரசு உள்ளபடியே ஈழத் தமிழருக்கு ஆதரவான அரசு அல்ல. பாஜக அல்லது காங்கிரஸ் அரசாக இருந்தாலும் அதுதான் நிலைப்பாடு. மாநில அரசு கோரிக்கைதான் வைக்கலாம்- முடிவெடுக்கவும் முடியாது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.












Click it and Unblock the Notifications