பிரபாகரன் உயிருடன் இல்லவே இல்லை.. ராஜபக்சே செய்த அந்த காரியம்- அடித்து சொல்லும் தொல். திருமாவளவன்
பிரபாகரன் உயிருடன் இல்லை என்கிறார் விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லவே இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறை டிவியின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் பங்கேற்ற தொல்.திருமாவளவன் எம்.பி. பிரபாகரன் தொடர்பாக கூறியதாவது:
2009-ம் ஆண்டு மே 17-ந் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என ஒரு தகவல் பரவுகிறது. வெளிநாட்டுக்கு எங்கோ போன ராஜபக்சே, விமானத்தில் வந்து இறங்குகிறார். அந்த விமான நிலையத்திலேயே தரையில் அமர்ந்து, மண்ணை தொட்டு வணங்குகிறார். அவருக்கு போர் முடிந்துவிட்டது என்ற தகவல் கிடைத்ததன் அடிப்படையில்தான் அந்த செய்கையை செய்கிறார் என எண்ண தோன்றுகிறது; நம்ப தோன்றுகிறது. மே 18-ந் தேதி பிரபாகரன் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்கள். பிரபாகரன் இல்லை; போர் முடிந்தது என அறிவிக்கின்றனர்.

ஆனால் மே19 அல்லது 20-ந் தேதி என கருதுகிறேன். அப்போது அய்யா பழ.நெடுமாறனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிகுந்த துயரத்தோடு, துக்கத்தோடு, சொல்லொணா வலியோடு நான் கேட்கிறேன்.. அய்யா, அண்ணன் நிலை என்ன? அவர்கள் சொல்வது உண்மையா? தொலைக்காட்சிகளில் இப்படி வந்து கொண்டிருக்கிறது என்று கேட்டேன். அப்ப ஐயா சொன்னது என்னவெனில், அவர் நலமுடன் இருக்கிறார். அதைப்பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று சொன்னதோடு நிறுத்தாமல் உங்க தலைவரிடம் சொல்லுங்கள்.. அங்க இருக்கிற மக்களுக்கு உதவி செய்ய சொல்லுங்கள் என்றார். எனக்கு புரியவில்லை. அதனால் யாரிடம் சொல்ல வேண்டும் என அய்யாவிடம் கேட்டேன். கருணாநிதியிடம் சொல்லுங்கள் என்றார் பழ.நெடுமாறன்.
அதாவது ராஜபக்சே அல்லது சிங்கள பவுத்த பேரினவாத அரசு, பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று சொல்வதற்கு அவர்கள் பல ஆதாரங்களைக் காட்டுகின்றனர். ஒரு உடலைக் கூட காட்டுகின்றனர். பிறகு சான்றிதழை காட்டினார்கள். இதெல்லாம் விவாதத்துக்குரியது.
ஆனால் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என அப்போதே, அந்த நாளில் 13 ஆண்டுகளுக்கு முன்னர், நெடுமாறன் சொன்னதற்கு எந்த ஆதராமும் எமக்கு இல்லை. ஒன்றே ஒன்று, நெடுமாறனுக்கு தனிப்பட்ட முறையில் பிரபாகரன் கூடவே இருந்தவர்கள் சொல்லி இருந்தால்மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.
பிரபாகரன் இறந்துவிட்டார் என இலங்கை சொல்வதை நாம் நம்பவில்லை. அப்படி நம்பாத காரணத்தால்தான் பிரபாகரன் இறந்துவிட்டார் என நாம் எங்கேயும் இதுவரை சொல்லவும் இல்லை. இப்பதான் அதைப் பற்றி நாம் பேச வேண்டிய நிலை வருகிறது. பிரபாகரன் இறந்துவிட்டார் என நாம் கருதி இருந்தால் வீரவணக்க கூட்டங்களை நடத்தி இருப்போம். ஆனால் அதற்குப் பிறகு ஏராளமானவர்கள் இலங்கையில் இருந்து தப்பி வந்தார்கள். நிறைய தளபதிகளின் குடும்பத்தினர் வந்தனர். அவர்களை சந்திக்கிற வாய்ப்பும் கிடைத்தது. என்னால் ஆன உதவிகளை அவர்களுக்கு செய்யவும் முடிந்தது. அவர்கள் சொன்னதில் இருந்து பிரபாகரன் இல்லை என்கிற எண்ணம்தான் எனக்கு வலுப்பட்டது. ஆனாலும் பிரபாகரன் இல்லை என எங்கும் நான் சொன்னதும் இல்லை.

இப்ப நான் சொல்கிறேன். பிரபாகரன் இல்லை. பிரபாகரன் இல்லை என நான் நம்புகிறேன். அண்ணன் பிரபாகரன் இல்லை என நான் நம்புகிறேன்.இது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை. இது என்னுடைய தனிப்பட்ட உணர்வு. இவ்வாறு தொல்.திருமாவளவன் எம்பி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications