SIR: வந்தவர்கள் வீரர்கள்! வராதவர்கள் பயந்தாங்கொள்ளிகள்! ஆர்.எஸ்.பாரதி கடும் விமர்சனம்
சென்னை: பாஜகவுக்கு பயந்துக் கொண்டவர்கள் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு வரவில்லை, ஆனால் வீரர்கள் வந்தார்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட திமுகவின் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எஸ்ஐஆர் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வராதவர்கள் கோழைகள்.

இந்த கூட்டத்திற்கு நிறைய பேர் வந்தார்கள். அப்படியிருக்கும் போது வராதவர்கள் குறித்து ஏன் கவலைப்பட வேண்டும்? வந்தவர்கள் பெருந்தன்மையோடு வந்திருக்கிறார்கள், வரவேற்கிறோம். ஜனநாயக உரிமை அவர்களுக்கு இருக்கிறது.
மற்ற கட்சியினர் ஏதோ தனிப்பட்ட காரணங்களுக்காக பயந்து கொண்டு வரவில்லை. வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் பயந்தாங்கொள்ளிகள் வரவில்லை, வீரர்கள் வந்தார்கள்.
எஸ்ஐஆர் மட்டுமில்லை என்ஆர்சியும் குடியுரிமையை கேள்விக்குள்ளாக்கும் ஒரு சதி! நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ள சூழலில் அவசரமாக எஸ்ஐஆரை அமல்படுத்துவது ஏன்? இதையும் நம் வழக்கறிஞர்கள் வழக்கின் போது கேள்வி கேட்பார்கள். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் இன்று வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அரசியல் கட்சிகளின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தமாகா, அமமுக, நாதக, பாமக, தவெக உள்ளிட்ட 20 கட்சிகள் புறக்கணித்தன.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படுகிறது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம், தமிழகத்தில் உள்ள சட்டசபை தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலில் சிறப்பு சீர்திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
அதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில் அனைத்து மாவட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு இதற்கான அறிவுரைகளை வழங்கியது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் வரும் 4ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இதற்கு திமுக, கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அரசியல் கட்சிகளின் கூட்டம் நடந்தது. இதில் திமுக, காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, மக்கள் நீத் மய்யம், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதியும் வழக்கறிஞர் இளங்கோவும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் உண்மையான வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான முயற்சியை பாஜ மேற்கொள்கிறது. வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிரான தமிழகத்தின் உணர்வை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். தேர்தலுக்கு குறுகிய காலமே இருக்கும் இந்நேரத்தில் வாக்காளர் திருத்தம் என்பது உண்மையான வாக்காளர்களை நீக்கும் நோக்கமே, இதனால் எதிர்க்கிறோம்.
மக்கள் வாக்குரிமையை பறிக்கும் விதமாகவும் அவர்களை அச்சுறுத்தும் விதமாகவும் பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்றது. அதுபோல தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற உள்ளது.
இதற்கு எதிராக தமிழகம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது. நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் உரிய கால அவகாசத்தை கொடுக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications