நிர்வாகிகள் வைத்த கோரிக்கை! நிறைவேற்றித் தந்த எடப்பாடி பழனிசாமி! அனல் பறக்கும் தேர்தல் களம்!
சென்னை: அதிமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு கொடுப்பதற்கு இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
நிர்வாகிகள் விடுத்த வேண்டுகோள் காரணமாகவே இந்த கால அவகாசத்தை நீட்டித்து வழங்கியுள்ளதாக கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு'
''நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தங்களுடைய விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் 21.2.2024 முதல் 1.3.2024 வரை வழங்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன்படி ஏராளமானோர் தங்களுடைய விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் வழங்கி வருகின்றனர். ''
''இந்நிலையில், கழகத்தின் சார்பில் விருப்ப மனு பெறும் கால அளவை நீட்டித்துத் தருமாறு கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தொடர்ந்து விடுத்து வரும் வேண்டுகோளினை ஏற்று, 6.3.2024- புதன் கிழமை மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.''
''ஆகவே, கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், மேற்கண்ட தேதிக்குள் உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ''
இதனிடையே அப்சரா ரெட்டி, மதுரை டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர். மார்ச் 6ஆம் தேதிக்கு பிறகு வேட்பாளர் நேர்காணலை தொடங்கவுள்ளார் எடப்பாடி பழனிசாமி. முன் கூட்டியே வேட்பாளர் தேர்வை எடப்பாடி பழனிசாமி நடத்திவிட்டதாக கூறப்பட்ட நிலையில் வழக்கம் போல் முறைப்படி நேர்காணல் நடத்தவுள்ளார். தனது தலைமையில் அதிமுக தேர்தலை சந்திப்பதால் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தல் பணிகளில் அதீத கவனம் செலுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications