Thug life: அமித்ஷா கருத்துக்கு அமைதி.. கமலுக்கு மட்டும் கண்டனமா – திருமுருகன் காந்தி கேள்வி
சென்னை: தமிழில் இருந்து கன்னடம் சென்றது என்று நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்துக்கு கர்நாடகா மாநிலத்தில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. கன்னட அமைப்புகள் தொடங்கி நீதிமன்றம் வரை கமலை கேள்வி எழுப்பும் நிலையில் இந்தியாவில் சமஸ்கிருதத்தில் இருந்துதான் அனைத்து மொழிகளும் பிரிந்தன என்ற அமித்ஷா கருத்துக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தமிழக அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.
கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு எழுந்துள்ளது. கமல் மன்னிப்பு கேட்காவிடின் அவரின் தக் லைஃப் படத்தை வெளியிட முடியாது என்று கன்னட அமைப்புகள் கூறி வருகின்றன. அவர்களின் கருத்தை அந்த மாநில உயர் நீதிமன்றமும் ஆதரித்து கமல்ஹாசனுக்கு அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணன், "கமல் மொழி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அது அனைவரும் ஒப்புக் கொண்ட ஒன்று தான். இந்தியாவில் இந்தோ ஆரிய மொழிகள் ஒரு குடும்பமாகவும் தென்னகத்தில் இருப்பது திராவிட மொழிகள் ஒரு குடும்பமாகவும் அறியப்படுகிறது. கமல் பேசியதை மறுக்க கன்னடர்களுக்கு உரிமை உள்ளது.
அந்த கருத்தை மறுப்பதற்கு பதிலாக, அங்குள்ள அமைப்புகள் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. நீதிமன்றமும் அவர்களின் கருத்தை பிரதிபலிப்பது போல கருத்து தெரிவிப்பது வேதனையாக உள்ளது. கமல் திரைப்படத்தை வெளியிட மறுப்பது துர்பாக்கியமானது. இது எந்த வகையில் நியாயம். இது கருத்துரிமைக்கு எதிரானது.
இதுகுறித்து கமல்ஹாசன், நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்று தெளிவாக விளக்கமளித்துள்ளார்.
இந்தியாவின் அனைத்து மொழிகளும் சமஸ்கிருதத்தில் இருந்துதான் பிறந்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் என்று யாராவது பேச முடியுமா.
அமித்ஷாவின் கருத்து தவறானது என்று ஆதாரத்துடன் மறுப்பு தெரிவிக்கிறோம். கருத்துக்கு மாற்று கருத்து முன் வைக்கலாம். அதை விடுத்து மன்னிப்பு கேட்காவிடின் திரைப்படத்தை வெளியிட முடியாது என்று மிரட்டுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. கமல் உணர்ச்சிவசப்பட்டு தன் துறையில் உள்ளவரை வரவேற்றார். அவ்வளவுதான். கமல் தன்னுடைய நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளார்." என்றார்.
மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, "நீதிமன்றத்தின் கருத்து அதிர்ச்சியாக உள்ளது. இதை ஜனநாயக மரபாக பார்க்க முடியவில்லை. கமலின் கருத்துக்கும், அந்த திரைப்படத்துக்கும் தொடர்புள்ளதா என்பது கேள்விக்குறி. அதற்கும், படத்துக்கும் சம்பந்தமில்லை என்கிறபோது கருத்தின் மீதான விவாதம் தனி. அதைத் திரைப்படத்தின் மீது திணிப்பது தவறு. அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
கர்நாடகம் சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததா, தமிழில் இருந்து வந்ததா என்ற விவாதம் நடக்கட்டும். அதேநேரத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தாய் சமஸ்கிருதம் என்று உள்துறை அமித்ஷா கூறியபோது, கன்னட அமைப்புகள் ஏன் போராட்டம் நடத்தவில்லை. அப்போது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது போராட்டம் நடத்துவதையும், அதை நீதிமன்றம் ஆதரிப்பதும் வியப்பாக உள்ளது.
அப்படியென்றால் தமிழர்களுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் தர மாட்டோம் என்று கர்நாடகா பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் பேசியுள்ளனர். அந்தக் கட்சி தமிழகத்தில் போட்டியிடக் கூடாது என்று சொன்னால் நீதிமன்றம் அதை ஆதரிக்குமா. அடிப்படையில் கர்நாடகாவில் உள்ள இந்தி எதிர்ப்பு பிரச்னையை, தமிழ் எதிர்பாக மாற்ற அரசியல் செய்கிறார்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications