ஏங்க நான் ஒரு காமெடி பீஸ்! என்னை போய் அரசியலுக்கு.. ஆத்தாடி ஆளவிடுங்க! தலைதெறிக்க ஓடும் ஜிபி முத்து!
சென்னை: நானே ஒரு காமெடி பீஸ், என்னை போய் ஏன் அரசியலுக்கு இழுக்குறீங்க எனக் கேட்டிருக்கிறார் டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து.
ஏன் நான் சென்னையில் இருப்பது உங்களுக்கெல்லாம் பிடிக்கவில்லையா என்றும் மீண்டும் ஊருக்கே போய்விடவா எனவும் செய்தியாளர்களிடம் அப்பாவியாக கேட்டு செல்லமாக கோபித்துக் கொண்டார் ஜிபி முத்து.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜிபி முத்து, டிக்டாக் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமாகி இன்று உலகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்படும் காமெடி யூடியூபராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பிரபல திரை நட்சத்திரங்களுடன் போட்டிபோடும் அளவுக்கு ஜிபி முத்துவின் புகழ் வெளிச்சம் தமிழகம் முழுவதும் படர்ந்து விரிந்துள்ளது.

தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கள், திரைப்படங்கள் என திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ள இவர் இப்போது கடை திறப்பு விழாக்களிலும் கலந்துகொண்டு வருகிறார். இவரைக் காண கூட்டமும் திரண்டு விடுகிறது.
இதனிடையே சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த ஜிபி முத்துவிடம் அரசியல் தொடர்பான கேள்விகளை வீசினார்கள் செய்தியாளர்கள். இதென்ன புது வம்பாக இருக்கிறதே என நினைத்த அவர், அரசியலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி நழுவிக்கொண்டார்.
மேலும், நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டுமா வரக்கூடாதா என தாம் கருத்துச் சொல்ல முடியாது என்றும் அது அவரது தனிப்பட்ட விருப்பம் எனவும் கூறினார். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், அப்படி வருபவர்கள் மக்களுக்கு நல்லது செய்தால் போதும் எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications