திமுக அமோக வெற்றி.. விடிய விடிய வாக்கு எண்ணிக்கை.. அதிமுக தொடர்ந்து பின்னடைவு: ஊரக உள்ளாட்சி தேர்தல்
திமுகவே தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்று வருகிறது
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகி நடந்து வருகிறது.. இன்று அதிகாலை 5 மணி வரையிலான நிலவரப்படி திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.
138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது, 74 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.. அதேபோல, ஊராட்சி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளும் நேற்று முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை
இத்துடன், 2874 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 119 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 5 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்... நேற்று காலை முதல் இன்று காலை வரை விடிய விடிய வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று நள்ளிரவு 2 மணி வரையில் வெளியான முடிவுகளின் படி பெரும்பாலான இடங்களில் திமுகவே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

திமுக
140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக முன்னிலை பெற்றது.. அதிமுக, 5 இடங்கள் மட்டுமே முன்னிலையில் இருந்தது. இதேபோல், 1,381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 578 இடங்களிலும் திமுகவே முன்னிலை வகித்தது, 103 இடங்களில் மட்டுமே அதிமுக முன்னிலை வகித்தது.. இதையடுத்து விடிய விடிய வாக்குப்பதிவு நடந்தது.

அதிகாலை
இன்று அதிகாலை 5 மணி நிலவரப்படி பெரும்பாலான இடங்களில் திமுகவே தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அதாவது, 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 108 இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது.. ஆனால், அதிமுக அதே 5 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்து வருகிறது.. 1381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களிலும் 724 இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது... அதிமுகவோ, வெறும் 132 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

ஒற்றை இலக்கு
இதில், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 14 மையங்களில் நடை பெற்ற வாக்கு எண்ணிக்கையில் மாவட்ட ஊராட்சி மற்றும் 14 ஊராட்சி ஒன்றியங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது. இந்த முறை வாக்கு எண்ணிக்கையில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என்ற இரு பதவிகளிலுமே ஆரம்பத்தில் இருந்தே திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.. அதுமட்டுமல்ல, திமுக அனைத்து பதவிகளிலும் இரண்டு இலக்க எண்களில் முன்னிலை வகித்து வர, அதிமுகவோ, ஒற்றை இலக்கத்திலேயே தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications