வெட்கக்கேடானது.. பிளாக் மெயில்.. பழிவாங்கும் அரசியல் செய்யும் அண்ணாமலை.. கடுகடுத்த கே.எஸ் அழகிரி
சென்னை: தமிழ்நாட்டு அரசியலில் காமராஜர் காலத்தில் இருந்து எதிரும் புதிருமான அரசியல் நடந்து இருக்கிறது. ஆனால், பழிவாங்கும் அரசியல், கேவலமான அரசியல், பிளாக் மெயில் செய்யும் அரசியல் என்பது பாஜக வந்த பிறகு.. அண்ணாமலை வந்த பிறகுதான் நடக்கிறது என்று கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறி அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ விவகாரம் குறித்தும் பேசினார்.

நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த ஆடியோ சித்தரிக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக அரசியலில் இல்லாத கலாசாரத்தை பாஜகவும் அண்ணாமலையும் கொண்டு வந்திருப்பதாகவும் கடுமையாக விமர்சித்தார். கே.எஸ் அழகிரி பேட்டியின் விவரம் வருமாறு: -
நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பற்றிய தவறான ஒரு வீடியோவை அண்ணாமலை வெளியிட்டு இருக்கிறார். தமிழ்நாட்டு அரசியலில் காமராஜர் காலத்தில் இருந்து எதிரும் புதிருமான அரசியல் நடந்து இருக்கிறது. ஆனால், பழிவாங்கும் அரசியல், கேவலமான அரசியல், பிளாக் மெயில் செய்யும் அரசியல் என்பது பாஜக வந்த பிறகு அண்ணாமலை வந்த பிறகுதான் நடக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்திய, பொய்யான தகவலை அண்ணாமலை வெளியிடுவது வெட்கக் கேடானது. அரசாங்கத்தை விமர்சிக்கலாம். அரசாங்கத்தின் நடவடிக்கையை விமர்சிக்கலாம். ஆனால், தனிப்படட முறையில் இதேபோல மறைமுக செயல் செய்வது தமிழக அரசியலில் கிடையாது. இந்த கலாசாரத்தை காங்கிரஸ் வெறுக்கிறது.
அண்ணாமலை அவரது கட்சியின் கொள்கையை சொல்லி வளர்க்க வேண்டுமே தவிர பிறர் மீது பழி சொல்வது என்பதும் சேற்றை வாரி இறைப்பது என்பதும் மிகுந்த வருத்தத்திற்குரிய ஒன்றாக உள்ளது. கர்நாடகவில் காங்கிரஸ் வெற்றி முகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ராகுல் காந்தியின் நேர்மறையான அரசியல் வெற்றி பெற்று கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும்.
ராகுல் காந்தி மாபெரும் மக்கள் செல்வாக்கை பெற்று வருகிறார். அவருடைய கூட்டங்களுக்கு மக்கள் வெள்ளம் போல திரண்டு வருகிறார்கள். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் கட்டாயம் கூறுகிற ஒரு அற்புதமான நிகழ்வு நடக்கும் என்பதை நான் கூறிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது முன்னோர்கள் தங்கள் வாழ்நாளில் சம்பாதித்ததை விட இந்த ஒரு வருடத்தில் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் அதிக பணம் சம்பாதித்ததாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இரண்டாவது ஆடியோவும் வெளியானது.
சர்ச்சைக்குரிய ஆடியோ பற்றி தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார். "சமூக வலைதளங்களில் நான் பேசியதாக பரவும் ஆடியோ கிளிப் போலியாக ஜோடிக்கப்பட்டது. பொதுத்தளங்களில் கிடைக்கும் தொழில்நுட்பங்கள், அந்த ஆடியோ க்ளிப் நம்பகத்தன்மை கொண்டது அல்ல என்று தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
தற்போதைய தொழில்நுட்பங்கள் மூலம் இதுபோன்ற ஆடியோ, வீடியோ இனிவரும் காலங்களில் அதிகம் வெளியானால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும், துணையாகவும் சபரீசன் இருக்கிறார் . எதிர்க்கட்சிகள் கூட உதயநிதி, சபரீசன் மீது குற்றச்சாட்டுக்கள் வைக்காத நிலையில், அவர்கள் மீது களங்கம் சுமத்த ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவர்களிடம் இருந்து என்னை பிரிப்பதன் மூலம் தங்கள் அரசியல் எண்ணங்களை நிறைவேற்றத் துடிக்கிறார்கள். நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இயங்கி வருகிறோம். இனியும் அவ்வாறே தொடர்வோம்" என்று விளக்கம் அளித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications