சென்னை வந்த அமித்ஷாவுக்கு இரு புத்தகங்களை பரிசாக கொடுத்த பாஜக அண்ணாமலை.. என்னென்ன தெரியுமா?
சென்னை: சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட திருக்குறள் புத்தகத்தையும் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட தொல்காப்பியம் புத்தகத்தையும் பரிசாக வழங்கினார்.
புதுவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்றைய தினம் சென்னை வந்தார் மத்திய அமைச்சர் அமித்ஷா. விமான நிலையத்தில் அவருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதலில் அவர் பெங்களூர் வருவதாகத்தான் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவரது பயண திட்டம் மாற்றப்பட்டு சென்னை வந்தார்.

உள்துறை அமைச்சர்
விமான நிலையத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மத்திய இணையமைச்சர் எல் முருகன் திருக்குறள் புத்தகத்தை பரிசாக கொடுத்தார். அது போல் அண்ணாமலையும் இரு புத்தகங்களை அமித்ஷாவுக்கு பரிசாக கொடுத்து அதன் சாராம்சத்தையும் விளக்கியுள்ளார்.

அண்ணாமலை கொடுத்த புத்தகங்கள்
அண்ணாமலை கொடுத்த இரு புத்தகங்கள் திருக்குறள் மற்றும் தொல்காப்பியம். இதில் திருக்குறள் குஜராத்தி மொழியில் இயற்றப்பட்டது. அது போல் தொல்காப்பியம் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது. இதுகுறித்து கே அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் படங்களுடன் பதிவிட்டுள்ளார்.

என்ன புத்தகங்கள்
அவர் கூறுகையில் ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களால் ஆசீர்வதிக்கப்பட்ட நம் தமிழ் மண்ணிற்கு வருகை தந்த மாண்புமிகு திரு @AmitShah அவர்களை இன்று அன்புடன் வரவேற்றோம். நம் திருக்குறளையும் (குஜராத்தியில்),தமிழ் இலக்கிய மறை பழமையான
(2300 ஆண்டுகள்) தொல்காப்பியத்தை (இந்தியிலும்) அவருக்கு வழங்கி மகிழ்ந்தோம் என ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

எல் முருகன் அளித்த புத்தகம்
இதுகுறித்து மத்திய இணையமைச்சர் எல் முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் மாண்புமிகு.மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah ஜி அவர்களை சென்னை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்று, வாழ்வின் வழிமுறையை வகுத்துக் காட்டும் வண்ணம்,வள்ளுவ பெருந்தகை இயற்றிய #திருக்குறள் புத்தகத்தை வழங்கி வரவேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications