திரும்ப திரும்ப..புகழ்ந்து பேசியதால் முதல்வர் ஸ்டாலினிடம் குட்டு வாங்கிய திமுக எம்.எல்.ஏ. அன்பழகன்
சென்னை: சட்டசபையில் தம்மை புகழ்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ. சாக்கோட்டை அன்பழகனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவுறுத்தினார்.
Recommended Video
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் ஆகஸ்ட் 13-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதல் முறையாக காகிதமில்லாத இ பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதங்களின் போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரை அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏக்கள் புகழ்ந்து பேசி வந்தனர்.

புகழ்ச்சிக்கு முதல்வர் தடை
இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தடை விதித்துள்ளார். இது தொடர்பாக சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமுன்வடிவு, கேள்வி நேரத்தில் தலைவர்களை புகழ்ந்து பேச வேண்டாம். நேரத்தின் அருமை கருதி அமைச்சர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இந்த கட்டளையை பிறப்பிப்பதாக கூறியிருந்தார். ஆனாலும் இந்த புகழ்ச்சி படலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

திமுக எம்.எல்.ஏ.வுக்கு குட்டு
சட்டசபையில் இன்று இந்துசமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கும்பகோணம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சாக்கோட்டை அன்பழகன் பேசினார். அப்போது, சட்டசபையில் இன்று கண்ணியமாக கர்வம் கொள்ளாமல் அமர்ந்திருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். மு.க.ஸ்டாலினால் முதல்வராக முடியாது என்று சொன்னவர் (முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்) முகத்தை இந்த மன்றத்தில் பார்க்க முடியவில்லை என்றார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தம்மை புகழ்ந்து பேசக் கூடாது; மானியக் கோரிக்கைகள் மீதும் தொகுதி பிரச்சனைகள் குறித்து மட்டும்தான் பேச வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொண்டார்.

எடப்பாடி பேச்சு
அப்போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக எம்.எல்.ஏ. அன்பழகன், சபைக்கு வெளியே முன்னாள் அமைச்ச்சர் ஜெயக்குமார் பேசியதை பற்றி குறிப்பிட்டார். தற்போது ஜெயக்குமார் சட்டசபையிலும் இல்லை. 2017-ம் ஆண்டு சட்டசபையில் தமது அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்ட போது நடந்ததை பற்றி தாம் பேச தயாராக இருக்கிறோம் என்றார். அப்போது மீண்டும் எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 2017-ல் நிகழ்ந்த சட்டசபை சம்பவங்கள் தொடர்பாக விவாதிக்க நாங்களும் தயார் என்றார். இதனைத் தொடர்ந்து சபை முன்னவரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் எழுந்து, முதல்வரின் பதிலே போதுமானது. இதனைத் தொடர்ந்து விவாதிக்காமல் மானியக் கோரிக்கை மீதான விவாதம் மட்டும் தொடரட்டும் என்றார்.

2017-ல் என்னதான் நடந்தது?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். ஆனால் அவரை அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக இருந்த சசிகலா திடீரென ராஜினாமா செய்தார். சசிகலா முதல்வராக பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வமும் 11 எம்.எல்.ஏக்களும் தர்மயுத்தம் நடத்தினர். இதனால் அதிமுக இரண்டாக பிளவுபட்டது. பின்னர் வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்து போனது. பின்னர் கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்துவிட்டு சசிகலா சிறைக்குப் போனார். 11 எம்.எல்.ஏக்களுடன் அதிமுக ஓபிஎஸ் அணி தனியாக செயல்பட்டது. அந்த நிலையில் 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந் தேதியன்று சட்டசபையில் பெரும்பான்மையை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். அன்றைய தினம் சட்டசபை தொடங்கியது முதலே ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியாக இருந்த திமுக வலியுறுத்தியது. இதனால் சட்டசபை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை சபையில் இருந்து வெளியேற்ற சபாநாயகராக இருந்த தனபால் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது ஸ்டாலின் உள்ளிட்டோரை சபை காவலர்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர். அப்போது மு.க.ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டது. அதேநிலையில் அன்றைய ஆளுநரிடம் ஸ்டாலின் முறையிட்டிருந்தார். இதுதான் 2017-ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம். இதனைத்தான் விவாதிக்க தயார் என முதல்வர் ஸ்டாலினும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கூறியிருந்தனர்.












Click it and Unblock the Notifications