வெள்ளத்திலிருந்து சென்னைக்கு விரைவில் விடிவுகாலம்? சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த புதன்கிழமை சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது. கூட்டத்தின் முதல் நாளில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றினார்.
Recommended Video
அப்போது அவர் திமுக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் வெகுவாக பாராட்டினார். ஆளுநர் உரை நிறைவு பெற்ற பிறகு அலுவல் கூட்டம் நடைபெற்றது. கொரோனா காரணமாக சட்டசபை இன்றுடன் நிறைவு பெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

ஆளுநர் உரைக்கு முதல்வர் நன்றி
இந்த நிலையில் கடைசி நாளான இன்று காலை 10 மணிக்கு கேள்வி பதில் நேரத்துடன் சட்டசபை தொடங்கியது. எம்எல்ஏக்கள் தங்களின் தொகுதிகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினர் அதற்கு துறை ரீதியான அமைச்சர்கள் பதில் அளித்தனர். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
அப்போது அவர் திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். ஆளுநர் உரை என்பது மக்களின் பாராட்டு உரை என்று கூறிய அவர் ஆளுநருக்கும் நன்றி தெரிவித்தார். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார்.

அதிமுகவுக்கு பாராட்டு
அம்மா உணவகம் மூடப்படக்கூடாது என்பதே அரசின் எண்ணம் என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை அதிமுக அரசு முடக்கியது என்று குற்றம்சாட்டினார். மேலும் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஆதரவு கொடுத்த எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு பாராட்டும் தெரிவித்தார்.

ரூ.1,000 கோடி ஒதுக்கீடு
அப்போது சென்னையில் மழை, வெள்ள பாதிப்பை தடுக்க முதற்கட்டமாக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். வரும் காலங்களில் சென்னை மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படாத அளவுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்தார். இதன்மூலம் வெள்ள பாதிப்பில் இருந்து சென்னைக்கு கூடிய விரைவில் விடிவுகாலம் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications