பங்காரு அடிகளார் வீட்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்.. பொன்னாடை போர்த்தி நலம் விசாரிப்பு!
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்திட, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான நம்மைக் காக்கும் 48 என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
ஈரோடு, IRT பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகள் இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48" திட்டத்தில் இணைக்கப்பட்டன.

'நம்மைக் காக்கும் 48'
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

பங்காரு அடிகளார் வீட்டில் ஸ்டாலின்
இந்த விழா முடிந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் நேராக ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் இல்லத்திற்கு சென்றார். அங்கு ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி பங்காரு அடிகளார், அவரது மகன் கோ.ப.அன்பழகன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து வீட்டுக்குள் அழைத்து சென்றனர்.

உடல் நலம் குறித்து நலம் விசாரிப்பு
இதனை தொடர்ந்து ஆதிபராசக்தி பங்காரு அடிகளாருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், உடல் நலம் குறித்து அவரிடம் விசாரித்தார். பங்காரு அடிகளாரும் முதல்வருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதல்வருடன் ஆர்வமாக பேசிய பங்காரு அடிகளார் தனது குடும்ப உறுப்பினர்களை முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்
பின்பு பங்காரு அடிகளாளார் குடும்பத்தினர் ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். மேலும், முதல்வர் ஸ்டாலினுடன் பங்காரு அடிகளார் குடும்பத்தினர் குருப் போட்டோவும் எடுத்துக் கொண்டனர். . முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.












Click it and Unblock the Notifications