தெலுங்கு மொழியில் பிறந்த நாள் வாழ்த்து சொல்லி முதல்வர் ஸ்டாலினிடம் வாங்கி கட்டிய தமிழிசை!
சென்னை: மத்தியில் ஆளும் பாஜக அரசின் இந்தி திணிப்பை வலியுறுத்தும் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கும் வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழியில் தமிழக பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி தந்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டு மக்கள் முழுநம்பிக்கை வைத்து ஜனநாயக முறைப்படி முதலமைச்சர் என்ற பொறுப்பை வழங்கினார்கள். அதனால் என் பிறந்தநாளில் குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், பல்வேறு அரசியல்கட்சிகளின் தலைவர்கள் தங்கள் அன்பான வாழ்த்துகளைப் பதிவிட்டிருந்தனர். அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.

பா.ஜ.க. நிர்வாகியான அன்பு சகோதரி டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன் அவர்கள் எனக்கு 'மும்மொழி'யில் வாழ்த்துத் தெரிவித்துப் பதிவிட்டிருந்தார். மும்மொழித் திட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் என்பதை விளக்கி என்னுடைய பிறந்தநாள் செய்தியை நான் வெளியிட்டிருந்த நிலையில், சகோதரி அவர்கள் மும்மொழியில் வாழ்த்தி தன் அன்பையும், தன் இயக்கத்திற்குரிய 'பண்பையும்' காட்டியிருக்கிறார்.
சகோதரி தமிழிசையின் வாழ்த்துச் செய்திக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் 'இந்தி' இடம்பெறவில்லை. அதுதான் தமிழ்நாட்டில் நிலவுகிற உணர்வின் வெளிப்பாடு.
தமிழ் - ஆங்கிலம் இரண்டு மொழிகளில் அமைந்த வாழ்த்துக்குப் பிறகு, தெலுங்கு மொழியில் வாழ்த்தியிருக்கிறார். உங்களில் ஒருவனான எனக்கு தெலுங்கு தெரியாது. நான் படித்ததும் இல்லை. தெலுங்கானா மாநில ஆளுநராக இருந்த சகோதரி தமிழிசை அவர்கள் தெலுங்கு மொழியை அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், அவர் தெலுங்கு மொழியைப் பள்ளிப் பருவத்திலேயே படித்து அதனைத் தெரிந்துகொள்ளவில்லை.
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தில் பணியாற்றியதால், பழக்கத்தின் மூலமாக அறிந்து கொண்டிருக்கிறார். இதிலிருந்தே, மூன்றாவதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டியதில்லை என்பதையும், தேவைப்படுகிறவர்கள் அதனைப் புரிந்து கொண்டு பயன்படுத்த முடியும் என்கிற திராவிட இயக்கத்தின் கொள்கை வழியிலான தமிழ்நாட்டின் உணர்வையும் எனக்கானப் பிறந்தநாள் வாழ்த்துப் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ள சகோதரி தமிழிசைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்ன இருந்தாலும், அவர் நம் 'திராவிட மாடல்' ஆட்சியில் 'தகைசால் தமிழர் விருது' பெற்ற இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்களின் திருமகள் அல்லவா. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications