நோட் பண்ணீங்களா? பொங்கலோடு தமிழ் புத்தாண்டிற்கும் வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்- அடுத்த மூவ் என்ன
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் திமுக கட்சி நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார். இந்த மடலில் தை 1ம் தேதி அன்று பொங்கலோடு சேர்த்து தமிழ் புத்தாண்டிற்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய இந்த வாழ்த்து மடல் தமிழ்நாடு அரசியலில் மீண்டும் தமிழ் புத்தாண்டு தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் புத்தாண்டு நாள் குறித்த விவாதம் கடந்த பல வருடங்களாக நடந்து வருகிறது. 2006-11 வரையிலான திமுக ஆட்சியில் தை ஒன்றுதான் தமிழ் புத்தாண்டு என்று பின்பற்றப்பட்டு வந்தது.
இதுதான் உண்மையான தமிழ் புத்தாண்டு என்று பல வரலாற்று ஆய்வாளர்களும் ஏற்கனவே குறிப்பிட்டு உள்ளனர். ஆனாலும் சித்திரையில் தமிழ் புத்தாண்டு கொண்டாடும் மக்களும் இருக்கிறார்கள்.

சித்திரை புத்தாண்டு
சித்திரையில் புத்தாண்டு கொண்டாடுவது தமிழ் வழக்கம் இல்லை. அது சம்ஸ்கிருத வழக்கம். தை மகளை வரவேற்கும் முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்பது திமுகவின் நிலைப்பாடு. இதற்காக திமுக ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டாலும் அதன்பின் 2011ல் அதிமுக ஆட்சியில் சித்திரையே தமிழ் புத்தாண்டு என்று மீண்டும் அறிவிக்கப்பட்டது. இதற்காக அரசாணையும் வெளியிடப்பட்டது.

அதிமுக அரசாணை
நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை இல்லை தமிழ் புத்தாண்டு தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்று பாரதிதாசனும் கூட தனது கவிதையில் குறிப்பிட்டு இருக்கிறார். சமஸ்கிருத பெயர்கள் கொண்ட 60 வருடங்கள் எப்படி தமிழ் வருடங்களாக இருக்க முடியும். 60 வருடங்கள் மாறி மாறி வருவது எப்படி தமிழ் புத்தாண்டாக இருக்க முடியும் என்று வாதங்கள் வைக்கப்பட்டு வருகிறது. பல தமிழ் அறிஞர்களும் தை 1 அன்றுதான் தமிழ் புத்தாண்டு என்று கூறி உள்ளனர். ஆனாலும் சித்திரைதான் தமிழ் புத்தாண்டு என்று ஒருசாரார் வாதம் வைப்பது உண்டு.

தை புத்தாண்டு
இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே கடுமையான கருத்து மோதல் நிகழ்ந்து வருகிறது. தை 1ம் தேதிதான் தமிழ் புத்தாண்டு என்று திமுக வெளிப்படையாக நிலைப்பாடு எடுத்துள்ளது. அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் சித்திரை 1ம் தேதிதான் புத்தாண்டு என்று அறிவித்துள்ளது. சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு. சமஸ்கிருத மாத பெயர்களிலேயே தமிழ் புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்றும் இன்னொரு சாரார் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில்தான் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார். இதில் தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டு என்று கூறி அதற்கும் சேர்த்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார், அதில், தமிழ்ப் பண்பாட்டின் தனிப்பெரும் அடையாளமான திருநாள், உலகத்தாரின் அச்சாணியான உழவர்களின் தன்மானத் திருநாள், அவர்களின் அயராத உழைப்பிற்கு அரிய துணையாகும் இயற்கைக்கும், உயிரினங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் திருநாள், மரபார்ந்த மனங்கவர் கலைகளையும் வீர விளையாட்டுகளையும் வெளிப்படுத்தும் திருநாள். இப்படித் தனித்தனியாக வகைப்படுத்திச் சொல்லாமல் அனைத்தையும் இணைத்து ஒட்டுமொத்தமாக, ‘தமிழர் திருநாள்' என, பூமிப் பந்தில் தமிழர்கள் எந்நாட்டில் இருந்தாலும் அங்கெல்லாம் போற்றப்படும் பொங்கல் நன்னாளில் இனிய வாழ்த்துகளை உடன்பிறப்புகளாம் உங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் தெரிவித்து உள்ளத்தில் உவகை கொள்கின்றேன்.

பொங்கல் திருநாள்
பொங்கல் திருநாள் என்றாலே இனிப்பு-இனிமை. அதிலும் இந்த ஆண்டு, நம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக ஆட்சியமைத்த பிறகு வருகின்ற முதல் பொங்கல் திருநாள் என்பதால் இரட்டிப்பு இனிப்பும் இனிமையும் இதயத்தை நிரப்புகிறது. பொங்கல் விழாவைத் தமிழர் திருநாளாக அடையாளப்படுத்தியதில் திராவிட இயக்கத்திற்குப் பெரும் பங்கு உண்டு. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், பேரறிஞர் பெருந்தகை அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் பொங்கல் திருநாளே தமிழர்கள் அனைவருக்குமான விழா என்பதை எழுத்துகளாலும் பேச்சுகளாலும் நிகழ்ச்சிகளாலும் மக்கள் மனதில் என்றும் நீங்காமல் நிலைபெறச் செய்தனர். புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனும், தமிழறிஞர்களும் பொங்கல் விழாவையும், தை முதல் நாளையும் சிறப்பித்துப் பாடினர்.

ஸ்டாலின் வாழ்த்து
நிலமகள் நெற்சலங்கை கட்டி ‘தை.. தை.. தை..‘ எனக் குலுங்கி ஆடுகிற தை முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் விழா நாளில் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கிட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் தி.மு.கழக அரசு, முழுக் கரும்புடன் பொங்கல் பரிசுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினைப் பல லட்சக் கணக்கான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கியிருக்கிறது. கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் அலை கோர வேகம் கொண்டு பரவுகிற நேரத்தில், தமிழ் மக்களுக்கு அச்சமோ பாதுகாப்பற்ற நிலையோ சிறிதளவும் ஏற்படாதவாறு, அவர்கள் வீட்டில் ‘பொங்கலோ பொங்கல்' என்று உற்சாகக் குரல் உயர்ந்து பொங்கிட, இந்தத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசின் தரமான பொங்கல் தொகுப்பு, உரிய முறையில், அனைத்து மக்களுக்கும் சென்று சேர்வதை உறுதிசெய்திட வேண்டும் என அதிகாரிகளையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் அன்புடன் கேட்டுக்கொண்டதுடன், நியாய விலைக் கடைகள் சிலவற்றுக்கு உங்களில் ஒருவனான நானும் நேரில் சென்று பார்வையிட்டு, மக்களுக்கு அவற்றை வழங்கி, உறுதிசெய்தேன்.

தமிழர் திருநாள்
ஒரு கையில் கரும்பும், இன்னொரு கையில் பொங்கல் பரிசுப் பையையும் எடுத்துச் செல்லும் பொதுமக்கள் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி. அது அவர்களின் இதயத்திலிருந்து பொங்கி வழிந்தோடும் மகிழ்ச்சியல்லவா! வீண் - காழ்ப்புணர்ச்சி விமர்சனங்களை விறகாக்கி அடுப்பெரித்து, இன்பப் பொங்கல் பொங்குவது போல, தமிழ்நாட்டு மக்களிடம் மகிழ்ச்சி பொங்கிடக் கண்டேன். நம்மை நம்பி வாக்களித்த பொதுமக்களுக்கு, அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், ஒவ்வொரு திட்டத்தையும் முழுமையாகவும், நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படுத்துவதில் நமது அரசு மிகவும் உறுதியுடன் இருக்கிறது. பொதுமக்கள் நமக்களித்த இந்த மகத்தான வெற்றியை, தேர்தல் நேரத்துக் களப்பணியின் வாயிலாக உறுதி செய்தவர்கள் நம் உயிர் நிகர் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாகிய நீங்கள்தானே! வெற்றி வீரர்களான உங்கள் முகத்திலும், அகத்திலும் தமிழர் திருநாளில் புன்சிரிப்பு பொங்கிட வேண்டுமன்றோ! என்று முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் புத்தாண்டு
இந்த கடிதத்தின் கடைசியில், மக்கள் நலனை மனதில் முழுமையாகக் கொண்டு, கட்டுப்பாடு காத்து, கடமை உணர்வுடன், கண்ணியம் மிளிர்ந்திடச் செயல்படும் உடன்பிறப்புகளின் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்து பொங்கும் மகிழ்ச்சியில் நானும் திளைப்பேன். தமிழர்களின் உள்ளங்களில் இனிமை பொங்கட்டும்! தமிழ்கூறும் நல்லுலகெங்கும் நன்மை விளையட்டும்! அனைவருக்கும் தை முதல் நாளாம், இனிய பொங்கல் - இன்பத் தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள் நல்வாழ்த்துகள்!, என்று தமிழ் புத்தாண்டு வாழ்த்தையும் சேர்த்து முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருக்கிறார்.

புதிய தேதி
திமுக ஆட்சிக்கு வந்த பின் மீண்டும் தை 1ம் தேதிதான் தமிழ் புத்தாண்டு என்று சட்ட ரீதியாக மாற்றப்படவில்லை. இருப்பினும் ஆளும் தரப்பினர் தை 1ம் தேதிதான் தமிழ் புத்தாண்டு என்று பல்வேறு இடங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். முக்கியமான பொங்கல் பரிசு தொகுப்பிற்கான பையில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு மீண்டும் தை 1ம் தேதியை புத்தாண்டு என்று அறிவிக்க போகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

விரைவில் சட்டம்
தற்போது முதல்வர் ஸ்டாலினும் தனது மடலில் இப்படி குறிப்பிட்டு இருக்கிறார். இதன் காரணமாக பெரும்பாலும் அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம். அல்லது அதற்கு முன்பாக முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பான அறிவிப்புகளை முறையாக வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் இதனால் தமிழ் புத்தாண்டு மீண்டும் விவாதப்பொருளாகி உள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications