உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி.. பா.ம.க எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது.. கே.எஸ்.அழகிரி சொல்கிறார்
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து பா.ம.க பிரிந்து சென்றது வரவேற்கத்தக்கது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில் அதிமுக-பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று இருந்து பாமக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.

பாமக தனித்து போட்டி
அ.தி.மு.க கூட்டணி தர்மத்தை மதிக்கவில்லை என்றும் அதிமுக நிர்வாகிகள் சட்டமன்ற தேர்தலில் பாமகவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் பாமக குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், '' கூட்டணியில் இருப்பதும் செல்வதும் அவரவர் விருப்பம். அதற்காக அதிமுகவை விமர்சிப்பது சரியல்ல'' என்று கூறி இருந்தார்.

இதுதான் வித்தியாசம்
இந்த நிலையில் அதிமுக-பாமக கூட்டணி முறிவு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து கூறியுள்ளார். திருவள்ளூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட அவர் இது தொடர்பாக கூறியதாவது:- பாட்டாளி மக்கள் கட்சி அ.தி.மு.க.வில் இருந்து விலகி இருப்பது வரவேற்கத்தக்கது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தன்னுடைய கூட்டணியை இழந்திருக்கிறது. அதே சமயத்தில் காங்கிரஸின் கூட்டணி வலிமையாக உள்ளது. இதுதான் திமுக-காங்கிரஸ், கூட்டணி அதிமுக-பாஜக உள்ள வித்தியாசம்.

நல்ல பாதை
புதிய ஆளுநர் நியமனம் குறித்து காங்கிரஸின் பார்வையோடு தன்னுடைய பார்வையும் ஒத்துப் போகிறது என்று திருமாவளவன் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. புதிய ஆளுநர் ஜனநாயகத் தன்மையை உணர்ந்து செயல்பட வேண்டும். தி.மு.க தலைமையிலான அரசு நல்ல பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
அனைத்தும் ஜனநாயக முறைப்படி நடந்து கொண்டிருக்கின்றன. அனைத்து அரசியல் கருத்துகளுக்கும் மதிப்பளிப்பதும் அதனுடைய வெளிப்பாடுதான்.

தீர்மானம்
3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தின் நலனுக்காக குரல் கொடுத்து வருகிறார்கள். சிறந்த பொருளாதார வழிமுறையை கையாளுகிறார்கள். மொத்தத்தில் தி.மு.க.வின் தொடக்கம் நல்ல தொடக்கமாக இருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடு வரவேற்கத்தக்கது. இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications