கருணாநிதிக்கு நினைவிடம்.. மெரினாவில் ரெடியாகிறது.. அரசாரணை வெளியிட்டது தமிழக அரசு
: கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது
சென்னை: சென்னை மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடம் அமைக்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது
தமிழகத்தில் 10 வருடம் கழித்து திமுக ஆட்சி அமைந்துள்ளது... கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் பல முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அந்த வகையில், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரீனாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்...

சாதனைகள்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப் படங்களுடன் சென்னை மெரினா கடற்கரையில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என்று கூறினார்..

அறிவிப்பு
மேலும், அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே நினைவிடம் அமைக்கப்படும். அந்த நினைவிடத்தில் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை அடங்கிய நவீன ஒளிப்படங்கள் இடம்பெறும்" என்றார். விதி எண் 110ன் கீழ் இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அப்போது வெளியிட்டிருந்தார்.

ஓபிஎஸ்
இதையடுத்து, நினைவிடம் அமைப்பதற்கான தீர்மானமும் பேரவையில் உடனடியாக நிறைவேற்றப்பட்டது... இந்த தீர்மானத்திற்கு எதிர்கட்சித் துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தந்தார்.. அதுமட்டுமல்ல, "என் அப்பா தீவிரமான கருணாநிதி பக்தர்... அவர் பெட்டியில் எப்போதும் கலைஞரின் 'பராசக்தி' பட வசனப் புத்தகம் இருக்கும்" என்று ஓபிஎஸ் பேசியிருந்தது, பலரது கவனத்தையும் அவையில் ஈர்த்தது. அதேபோல, கூட்டணிக் கட்சிகளும் தங்கள் ஆதரவை இந்த தீர்மானத்துக்கு வழங்கியிருந்தனர்.

எவ வேலு
இதனிடையே, நினைவிடத்திற்கான திட்ட மதிப்பீடுகள் தயார் நிலையில் இருப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு கூறியிருந்தார்.. தெரிவித்திருந்தார். இது குறித்த விரிவான திட்ட அறிக்கைக்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி வழங்கியுள்ளதாகவும், அது நிதித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு கருணாநிதி நினைவிடப்பணிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் எவ வேலு உறுதிபட தெரிவித்திருந்தார்.

நினைவிடம்
அதன் தொடர்ச்சியாக, நினைவிடத்தின் மாதிரி வரைபடமும் வெளியிடப்பட்டது... அதில், உதயசூரியன் வடிவில் கருணாநிதி நினைவிடமும், முகப்பில் பிரம்மாண்டமான பேனா வடிவிலான தூணும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ 39 கோடி செலவில் சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம் அமைக்கப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு அறிவித்துள்ளது.. இதைத்தொடர்ந்து, கருணாநிதி நினைவிடப்பணிகள் தொடர்பாக ஒப்பந்த புள்ளி கோரப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications