விவசாயிகளுக்கு நற்செய்தி.. வேளாண் இயந்திரங்களுக்கு மானியம்.. இனி நிம்மதி .. தமிழக அரசின் சர்ப்ரைஸ்
சென்னை: வேளாண் இயந்திரங்களுக்கு மானியம் வழங்கி, விவசாயிகளுக்கு சூப்பர் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.. இது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை பெற்று தந்து வருகிறது.
சமீபகாலமாகவே, வேளாண் துறையில், தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, விதைப்பு முதல் அறுவடை முடிய அனைத்து சாகுபடி பணிகளையும் வேளாண் இயந்திரங்கள் மூலமாக மேற்கொள்வதற்காக முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், ஏராளமான விவசாயிகளுக்கு சொந்தமாக வேளாண் கருவிகள் கிடையாது.
அவர்களது இந்த தேவையை பூர்த்தி செய்யவே, வேளாண்மை பொறியியல் துறை மூலம் மண் தள்ளும் இயந்திரம், டிராக்டர், மினி டிராக்டர், நெல் அறுவடை இயந்திரம், கரும்பு அறுவடை இயந்திரம் போன்ற 697 நில மேம்பாட்டு இயந்திரங்களும், சுழல் விசைத்துளை கருவி, பெர்குஷன் கருவி, சிறு விசைத்துளைக் கருவி போன்ற 101 சிறுபாசனத் திட்டக் கருவிகளும் விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த குறைந்த வாடகையில் வழங்கப்பட்டு வருகின்றன.
காய்கறிகள்: இதைத்தவிர, உளிக்கலப்பை, ரோட்டவேட்டர், கொத்துக் கலப்பை, நிலம் சமன் செய்யும் கருவி, விதை விதைக்கும் கருவி, வரப்பு செதுக்கி சேறு பூசும் கருவி, கரும்பு மற்றும் காய்கறி நாற்று நடவு செய்யும் கருவி, களையெடுக்கும் கருவி, பல்வகை பயிர் கதிரடிக்கும் இயந்திரம் போன்ற 40 வகையான 1,885 டிராக்டரால் இயங்கக்கூடிய வேளாண் கருவிகள் டிராக்டருடன் அரசு நிர்ணயித்த குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த இயந்திரங்களை விவசாயிகள் தங்களுடைய வீட்டிலிருந்தபடியே, ஆன்லைனில் ரிசர்வ் செய்துகொள்ளும் "இ-வாடகை" என்ற செயலியை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.. இதன்மூலம் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்படுகின்றன.
சிறு, குறு விவசாயிகள்: சொந்தமாக நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு, வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை இ-வாடகை செயலி மூலம் பதிவு செய்து, நிலமேம்பாடு, உழவு, விதைப்பு, அறுவடை, பண்ணைக் கழிவு மேலாண்மை போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு மானியம் வழங்கப்படுகிறது. இதற்கெனவே, அரசு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.. இதன்மூலம் 40 லட்சம் ரூபாய் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு கூறியிருப்பதாவது: "இ - வாடகை செயலியை பயன்படுத்தி, இயந்திரங்களை வாடகைக்கு பெற்று, பணிகள் நிறைவடைந்த பின், விவசாயி செலுத்திய மொத்த வாடகைத் தொகையில், 50 சதவீதத் தொகை, பின்னேற்பு மானியமாக, அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஒரு விவசாயிக்கு ஐந்து மணி நேரம் அல்லது ஐந்து ஏக்கர் ஆகியவற்றுக்கான வாடகையில், எது குறைவோ, அந்த வாடகை மானியமாக வழங்கப்படும்.
மானியம்: நன்செய் நிலமுடைய சிறு, குறு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு 250 ரூபாய் வீதம், அதிகபட்சமாக 2.5 ஏக்கருக்கு 250 ரூபாய் வீதம், அதிகபட்சமாக 2.5 ஏக்கருக்கு 625 ரூபாய் வரை, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மானியம் வழங்கப்படும். புன்செய் நிலமுடைய சிறு, குறு விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு 250 ரூபாய் வீதம், அதிகபட்சமாக ஐந்து ஏக்கருக்கு 1,250 ரூபாய் வரை, ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் மானியம் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications