அக்கவுண்ட்டில் இன்னும் ரூ.1000 வரலியா? புது ரேசன் கார்டு அப்ளை செய்தவர்களுக்கு,விரைவில் நல்ல செய்தி?
சென்னை: புதிய ரேஷன் கார்டுகள் பலரும் விண்ணப்பித்துள்ள நிலையில், இதுகுறித்து தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடியே, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை அமலாக்கி உள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.. ஆனால், "தகுதியுடையவருக்கு உரிமைத்தொகை" என்பதால், இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் தலையிட்டன.. அனைவருக்குமே உரிமைத்தொகையை தர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

உரிமைத்தொகை: மற்றொருபக்கம் தகுதியுடைய நிறைய பேருக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்ற சச்சரவுகளும், வெடித்து வருகின்றன.. தற்சமயம், சுமார் 45 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எனினும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டோரும் கூட தாங்கள் தகுதியுள்ளவர்கள் என்று கருதினால் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டோரில் பலரும் மேல்முறையீடு செய்து வருகிறார்கள்.. இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் மேல்முறையீட்டுக்கு போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
இந்த முறையீடு 18 வரை செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. இதனிடையே, இந்த திட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
அடுத்த புகார்: தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடனில் இருக்கும்போது, இதுபோன்ற திட்டங்கள் மேலும் கடன் சுமையை அதிகரிக்கும் என்பதால் இந்தத் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல, மகளிர் உரிமைத்தொகை வழங்குவதை காரணம்காட்டி, புதிய ரேசன் கார்டுகளை வழங்காமல், அதிகாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக, இன்னொரு புகார் கிளம்பி உள்ளது..
பாதுகாப்பு உரிமை: இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உணவு வழங்கல் ஆணையர், நாகை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நலச்சங்க தலைவர் என்.பி. பாஸ்கரன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் "தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் குறைந்தது 500 புதிய குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. தமிழகம் முழுவதும் கணக்கிட்டால் ஒரு லட்சம் விண்ணப்பங்கள் இருக்கலாம். கலைஞர் உரிமைத் தொகைப் பணிகளுக்காக புதிய குடும்ப அட்டை விண்ணப்பங்களை நிறுத்தி வைத்துள்ளதாக அதிகாரிகள் சொல்கிறார்கள். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் புகார்: வழக்கமாக, புதிய கார்டு வேண்டி விண்ணப்பித்தால், அடுத்த 30 நாட்களுக்குள், புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும் என்பது அடிப்படையான விஷயம். அதனால்தான், தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, தகுதியான நபருக்கு குறித்த காலத்தில் ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என்றும், ரேஷன் கடைகளுக்கு அனைத்து தானியங்களையும் அனுப்ப வேண்டும் என்றும் தலைமை செயலாளர் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார்.
அப்படியிருந்தும்கூட, இதுவரை ரேஷன் உரியவர்களுக்கு கார்டுகள் கிடைக்கவில்லை என்ற குமுறல்கள் வெடித்தன. இப்போது, கோட்டைக்கே புகார் பறந்துள்ளதால், அரசு இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விளக்கம்: இதனிடையே, புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்கலாமா? என்ற சந்தேகம் நிலவிவந்தது.. இதற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசு விளக்கம் தந்திருந்தது.. அதாவது, புதிதாக ரேஷன் பெற்றவர்களும் இந்த திட்டத்தில் இணைய விண்ணப்பிக்கலாம், அவ்வபோது தகுதி உள்ளவர்கள் ரூ. 1000 உரிமை தொகைதிட்டத்தில் இணைவதற்கான வழி வகைகள் மேற்கொள்ளப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications