“ஆளுநர் ரவியின் செயல் சட்டப்பிரிவு 200ஐ மீறுகிறது”.. புது வழக்கு.. உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு
டெல்லி: தமிழக ஆளுநர் ஆர். என். ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது சட்ட விரோதமானது என்று தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் "தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா" நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் தமிழக அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. மேலும், இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி குழுவில் நிதித்துறைச் செயலாளரை உறுப்பினர்களில் ஒருவராக நியமிப்பதற்கு ஏதுவாக திருத்தம் செய்யப்பட்டது.

தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த இந்த சட்டத் திருத்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார். வழக்கமான நடைமுறையின்படி, ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவோ அல்லது விளக்கத்திற்காக திருப்பியனுப்பவோ வேண்டும். ஆனால், ஆளுநர் ரவி அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும் வகையில் அனுப்பி வைத்தார். இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், ஆளுநரின் இந்த முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், இந்த மசோதா மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒன்று. இதில் எதுவும் மத்திய அரசின் அதிகாரப் பகுதியில் வருவதில்லை. எனவே, ஆளுநர் நேரடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் அதிகாரம் அவருக்கு இல்லை.
ஆளுநரின் இந்தச் செயல், அரசியல் சட்டப் பிரிவு 200-ஐ மீறுகிறது. மாநில அரசின் சட்டத் தீர்மானங்களை மாற்ற ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. எனவே, ஆளுநரின் நடவடிக்கையை செல்லாததாக உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியுள்ளது.இது அரசியல் சட்டத்தின் அடிப்படை நடைமுறையையும் மாநில அரசின் சுயாட்சியையும் மீறும் செயல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில ஆளுநர் ஒரு அரசியல் அதிகாரி அல்ல. அவர் மாநில அரசின் ஆலோசனையின் படியே செயல்பட வேண்டும். ஆனால், கடந்த சில மாதங்களாக ஆளுநர் தன்னிச்சையாக பல மசோதாக்களை ஒப்புதலின்றி நிறுத்தி வைப்பதும், சிலவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதும் அரசியலமைப்பை மீறிய செயல் ஆகும். இது மாநில சட்டமன்றத்தின் அதிகாரத்தை தகர்க்கும் நோக்கம் கொண்டது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கூட தமிழக அரசு, ஆளுநர் பல மசோதாக்களை ஒப்புதல் இன்றி தாமதப்படுத்தி வருவதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஆளுநர்கள் மசோதாக்களை நீண்ட காலம் நிலுவையில் வைக்கக் கூடாது என்று தெளிவாக கூறியிருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஆளுநருக்கு எதிராக புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மனு விரைவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கால் ஆளுநர் மற்றும் தமிழக அரசு இடையிலான அதிகாரப் பிரச்சனை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications