தமிழிசையின் தந்தை.. குமரி ஆனந்தனுக்காக தலைமை செயலகத்தில் ஸ்பெஷல் ஏற்பாடு! அசத்தும் தமிழக அரசு
சென்னை: தமிழக அரசின் ‛தகைசால் தமிழர்' விருதுக்கு பாஜகவை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் நாளை விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு வரும் குமரி ஆனந்தனுக்காக தலைமை செயலகத்தில் தமிழக அரசு சார்பில் ஸ்பெஷல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ‛தகைசால் தமிழர்' விருது என்பது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரூ.10 லட்சம் காசோலை, பாராட்டு சான்றிதழ் என்பது வழங்கப்படும். தமிழகத்தை பொறுத்தவரை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ‛தகைசால் தமிழர் விருது' வழங்கி வருகிறார்.

அந்த வகையில் நாளை சுதந்திர தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி ஆனந்தனுக்கு ‛தகைசால் தமிழர்' விருது என்பது வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது.
‛தகைசால் தமிழர்' விருது பெறும் குமரி அனந்தன் பன்முக திறன் கொண்டவர். தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்றவர். எம்பியாகவும், எம்எல்ஏவாகவும், காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார். மேலும் மதுவிலக்கு, பனை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாதயாத்திரை நடத்தினார். இவர் மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமாரின் உடன் பிறந்த அண்ணன்.
தற்போது குமரி ஆனந்தனுக்கு 91 வயது ஆகிறது. வயது முதிர்வு மற்றும் வயது முதிர்வால் வரும் உடல் உபாதையால் அவர் ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் தான் குமரி ஆனந்தனின் சேவையை பாராட்டி நாளை அவருக்கு ‛தகைசால் தமிழர்' விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். சுதந்திர தினமான நாளை முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் அமைந்துள்ள கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றுகிறார். அதன்பிறகு அவர் குமரி ஆனந்தனுக்கு ‛தகைசால் தமிழர்' விருது வழங்குகிறார்.
இதற்கிடையே தான் விருது பெறும் குமரி ஆனந்தனுக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது விழா மேடைக்கு அவர் படிக்கட்டுகள் ஏறி செல்ல முடியாது. இதனால் அவருக்காக சிறப்பு லிப்ட் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் இந்த ஏற்பாடு என்பது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் விழா மேடையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு லிப்ட்டை பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு இன்று ஆய்வு செய்தார்.
அதன்பிறகு அமைச்சர் எவ வேலு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது எவ வேலு கூறியதாவது: காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவராக இருந்தவர். இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் குமரி ஆனந்தன். அவருக்கு தகைசால் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வாங்க குமரி ஆனந்தன் வருகிறார். கோட்டை கொத்தளத்தில் ஏற வேண்டும் என்றால் அவரால் முடியாது. ஏனென்றால் 28 படிக்கற்கள் உள்ளன. இதனால் முதல்வர் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுப்பணித்துறைக்கு அறிவுரை வழங்கினார். அதன்படி பொதுப்பணித்துறை சார்பில் தற்காலிகமாக குமரி ஆனந்தனுக்காக லிப்ட் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த லிப்ட் முறையாக இயங்குகிறதா? எடையை தாங்கும் சக்தி உள்ளதா? என்பதை முறையாக பரிசோதனை செய்தேன். முதல்வர் ஆணையின்படி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட தேவையான பணிகளை பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொண்டுள்ளோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications