மதுரையிலும் அதிகரிக்கும் கொரோனா- மீண்டும் லாக்டவுனா? அமைச்சர் உதயகுமார் விளக்கம்
சென்னை: மதுரையிலும் கொரோனா அதிகரித்து வருவதால் லாக்டவுன் மீண்டும் அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து தமிழக அமைச்சர் உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இதனால் இம்மாவட்டங்களில் ஜூன் 30-ந் தேதி வரை மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களைப் போல் இல்லாமல் கடுமையாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கிறது என லோக்சபா எம்.பி. சு. வெங்கடேசன் கூறியிருந்தார். இதனால் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்படுமா? என்கிற கேள்வி எழுந்தது.

மதுரையில் மீண்டும் லாக்டவுனா?
இது தொடர்பாக மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கேட்டும் வருகிறார். நிலைமைக்கும் சூழலுக்கும் ஏற்ப லாக்டவுன் அமல்படுத்தப்படும். இது தொடர்பாக முதல்வர்தான் முடிவு எடுப்பார். மீண்டும் லாக்டவுன் அமலாக்கப்பட்டால் முன்னரே அறிவிக்கப்படும்.

தீவிர கண்காணிப்பு
மதுரை மாநகராட்சி சார்பில் ஒரு லட்சத்து பத்து ஆயிரம் குடியிருப்பு வளாகங்களுக்கு கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது, தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. நாளை முதல் சோதனை சாவடிகளில் காவல்துறையினர் தீவிர கண்கானிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மருத்துவ பரிசோதனை அதிகம்
மதுரையில் மருத்துவ பரிசோதனைகள் அதிகப்படுத்தபட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்த மதுரை எம்.பி.வெங்கடேசனே அரசை பாராட்டியுள்ளார். மதுரை மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். காய்கறி மார்க்கெட், இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என மதுரை மக்களிடம் கேட்டு கொள்கிறோம். இவ்வாறு உதயகுமார் கூறினார்.

கபசுர குடிநீர், மருந்துகள்
முன்னதாக மதுரை ஆண்டாள்புரம் வசுதரா குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், ஜிங்க், வைட்டமீன் மாத்திரைகள் அடங்கிய தொகுப்பை சுமார் 2000 பேருக்கு வழங்கினார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அப்போது பேசிய அவர், மருந்தே இல்லாத கொரோனா தொற்றிலிருந்து மீள அரசு கூறும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். 89 நாட்கள், 5 ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இது வரை அரசுக்கு மக்களுக்கு கொடுத்து வரும் ஒத்துழைப்பினை தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

பொக்கிஷமாக இந்திய மருத்துவம்
இந்திய மருத்துவம் தான் கொரோனா எதிர்ப்பிற்கான நமது பொக்கிஷம். அதற்காக ஆங்கில மருத்துவத்திற்கு எதிரானவர்கள் அல்ல நாம். மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை என அதிகாரிகளை தொடர்பு கொள்கிறார்கள் மக்கள் ஆனால் முக கவசம் அணிய அதிகாரிகள் வலியுறுத்தும் போது அதையும் மக்கள் கேட்டு கொள்ள வேண்டும். இவ்வாறு உதயகுமார் பேசினார்.












Click it and Unblock the Notifications