Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய பாஜக அரசுக்கும் ரிவிட் ரெடி-கல்வி நிதி மறுப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்லும் திமுக அரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கல்வி நிதியை தர மறுப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர ஆலோசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையான இந்தியை திணிக்கும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுப்பதால் மட்டுமே தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை மத்திய பாஜக அரசு தர மறுப்பதால் 40 லட்சம் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகிவிட்டதா உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர இருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

supreme court dmk bjp tamilnadu union govt

தமிழ்நாட்டுக்கு 'சமக்ர சிக்ஷா' எனும் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. இது தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் தமிழ்நாடு எம்பிக்கள் குரல் எழுப்பினர். நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். மத்திய அமைச்சர்களை சந்தித்தும் மனு கொடுத்தனர். தமிழ்நாடு சட்டசபையிலும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில், தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ முழுமையாக அமல்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை, தமிழ்நாட்டிற்கான 'சமக்ர சிக்ஷா' (Samagra Shiksha) திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்பட மாட்டாது" என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் சமீபத்தில் தெரிவித்திருப்பது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. இது தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெருத்த கவலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் கல்வி மற்றும் சமூகச் சூழலில், இருமொழிக் கொள்கையானது நீண்ட காலமாக ஆழமாக வேரூன்றியுள்ளதாகவும், அதனைப் பின்பற்றுவதில் தமிழ்நாடு எப்பொழுதும் உறுதியாக உள்ளது. அலுவல் மொழிகள் விதி, 1976-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, "அலுவல் மொழிச் சட்டம், 1963"-ஐச் செயல்படுத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நவோதயா வித்யாலயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகள் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுவதால் தான், தமிழ்நாட்டில் அவை நிறுவப்படவில்லை. இந்த இரு மொழிக் கொள்கை மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட முற்போக்குக் கொள்கைகளின் காரணமாக, கடந்த அரை நூற்றாண்டில் தமிழ்நாடு அடைந்துள்ள மகத்தான முன்னேற்றங்கள் மற்றும் அதற்கு வித்திடும் முன்முயற்சிகளைக் காண முடிகிறது.

எங்கள் இருமொழிக் கொள்கையில் எந்தவொரு மாற்றமும் கொண்டுவர உத்தேசிப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பெரிய அளவில் பயனளிக்காது என்பதை மேலே உள்ளவை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

இதுதவிர, தேசியக் கல்விக் கொள்கை-2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள சில விதிகள் குறித்து 27.08.2024 நாளிட்ட எனது கடிதத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் ஆழ்ந்த கவலைகள் முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, 27.09.2024 அன்று தனிப்பட்ட முறையில் விரிவான கோரிக்கை மனுவாக இந்தியப் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும், பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், "சமக்ரா சிக்ஷா" திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய நிதி ஒன்றிய அரசால் வழங்கப்படாமல் உள்ளது.

ஒன்றிய அரசின் இரண்டு வெவ்வேறு திட்டங்களான "சமக்ர சிக்ஷா" திட்டத்தையும், தேசிய கல்விக் கொள்கையைப் பிரதிபலிக்கும் பி.எம்.ஸ்ரீ. (PM SHRI) திட்டத்தையும் ஒன்றாகப் பொருத்திப் பார்ப்பது என்பது அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்பதைத் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

தற்போது ஒரு மாநிலத்தில், அங்குள்ள காலச் சூழலுக்கேற்ப பின்பற்றப்பட்டு வரும் கொள்கைகளுக்கு எதிராக, அந்த மாநிலத்தைக் கட்டாயப்படுத்துவதற்கு, நிதி வழங்கும் விவகாரங்களில் ஒன்றிய அரசு அழுத்தம் தரும் இத்தகைய முயற்சி, கூட்டாட்சித் தத்துவத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும்.

குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் தங்களது கல்விக் கொள்கைகளை வடிவமைக்கும் மாநிலங்களின் உரிமைகளை பெருமளவில் பாதிக்கும்.

தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்படாததால், ஆசிரியர்கள் சம்பளம், மாணவர்களுக்கான நலத் திட்டங்களை உள்ளடக்கிய கல்வி முன்னெடுப்பு முயற்சிகள், கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பயிலும் வறிய நிலையில் வாழும் மாணவர்களுக்கான கல்வித் தொகையைச் திருப்பிச் செலுத்துதல் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கான போக்குவரத்து போன்றவற்றிற்கான பல முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, இந்த விஷயத்தில் இந்தியப் பிரதமர் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு நிதி விடுவிக்கப்படாமல் உள்ளதால் ஏற்பட்டுள்ள வருந்தத்தக்க சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ செயல்படுத்துவதோடு 'சமக்ர சிக்ஷா' திட்டத்தைப் பொருத்திப் பார்க்காமல், 2024-25 ஆம் நிதியாண்டில் இந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ரூ.2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இப்பொருண்மையின் தீவிரத்தை உணர்ந்து, தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனாலும் மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை வழங்கவில்லை. இதனையடுத்து கல்வி நிதியை மத்திய அரசு உடனே வழங்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுள்ள நிலையில் மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர இருக்கும் வழக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+