பத்திரப்பதிவு மோசடிகளை தடுக்க.. சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு முக்கியமான பரிந்துரை
சென்னை: பத்திரப்பதிவு தொடர்பான புகார்களை விசாரிக்க மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
போலியான பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய வேண்டும், அசல் ஆவணங்களை பத்திரப்பதிவை செய்ய பத்திரப்பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பத்திரப்பதிவு தொடர்பான பல்வேறு வழக்குகளின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் முன்பு நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்வில்சன், தமிழக சட்டமன்றத்தில் பத்திரப்பதிவு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

பத்திரப் பதிவு ரத்து
மோசடியாக பதிவு செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை பதிவாளர்களுக்கு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், முறைகேடான பதிவுகளை செய்த பதிவு அலுவலருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த சட்ட மசோதாவில்,பத்திரப்பதிவு ஐஜியிடம் மேல்முறையீடு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

சிவில் நீதிமன்றம்
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஆர். சுரேஷ்குமார், பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்ய உத்தரவிடக்கோரிய அனைத்து ரிட் மனுக்களும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். ஒரு ஆவணத்தை பதிவு செய்தவுடன் அதை ரத்து செய்ய பதிவுத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்பதால் மனுதாரர்கள் சிவில் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மோசடி
மேலும் ஆவணங்களை ரத்து செய்வதற்கான வழிமுறைகளை, பத்திரப்பதிவுச் சட்டத்தில் பிரிவுகள் 77-ஏ 77-பி ஐ அறிமுகப்படுத்தி சமீபத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பதிவுச் சட்ட திருத்த மசோதாவையும் உயர்நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். புதிதாக உருவாக்கப்பட்ட விதிகளின் கீழ், மோசடியான ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத்துறை அதிகாரிகளை அணுகலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.

திருத்தச்சட்ட பிரிவு
மேலும் திருத்தச்சட்ட பிரிவு 77-ஏ மற்றும் 77-பி நடவடிக்கைகளில் மேல்முறையீடுகளை விசாரிக்க சட்டப்பூர்வ நபர்களைக் கொண்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்படலாம் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். அந்த தீர்ப்பாயத்தில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் பத்திரப்பதிவு துறை ஐஜி வருவாய்த்துறை அதிகாரிகள் இடம்பெறவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications