பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்- சட்டரீதியான நடவடிக்கை- அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
சென்னை: சென்னை கே.கே.நகர் பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீதான பாலியல் தொல்லை புகார் குறித்து அப்பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது; இது தொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை பத்மசேஷாத்ரி பள்ளி வணிகவியல் ஆசிரியராக பணியாற்றுகிறார் ராஜகோபால். இவர் மீது மாணவிகள் தொடர்ந்து பாலியல் தொல்லை புகார்கள் கொடுத்து வருகின்றனர்.

பாலியல் புகார்
ஆன்லைன் வகுப்புகளின் போதும் ஆசிரியர் ராஜகோபால் பாலியல் ரீதியாக பேசுவது, சீண்டுவது என ஈடுபட்டிருக்கிறார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பூதாகரமாக வெடித்தது.

நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
இதனைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியர் ராஜகோபால், அவர் மீது நடவடிக்கை எடுக்காத பத்மசேஷாத்ரி பள்ளி நிர்வாகம் ஆகியவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திமுக எம்,.பிக்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன் ஆகியோரும் இதனை வலியுறுத்தி உள்ளனர்.

சென்னை போலீஸ் விசாரணை
இதனிடையே இப்புகார் தொடர்பாக சென்னை கே.கே.நகர் போலீசார், பத்மசேஷாத்ரி பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆசிரியர் ராஜகோபால் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் மாணவிகளின் புகார் தொடர்பாக விரிவாக போலீசார் விசாரித்தனர்.

அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்தார். அவரிடம் இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பாலியல் புகார் விவகாரத்தில் பத்மசேஷாத்ரி பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது; அதன் பின்னர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications