இன்னும் ஒரு வாரம்.. மண்ணையும் மக்களையும் குளிர்விக்கப் போகும் மழை! கொஞ்சம் கவனமா இருங்க மக்களே!
சென்னை: வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, 13-ம் தேதி முதல் வரும் 15-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒருசில மாவட்டங்களில் கனமழையும், ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 14 செ.மீ. மழையும், தேவாலாவில் 13 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. வூட் பிரையர் எஸ்டேட்டில் 10 செ.மீ. மழையும், சின்னக்கல்லாரில் 7 செ.மீ. மழையும், வால்பாறை, அவலாஞ்சி, ஹரிசன் எஸ்டேட், செருமுள்ளி ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சோலையாறில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

வானிலை அறிவிப்பு
ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று, தெற்கு ஒடிசா பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றும், நாளையும் கனமழை
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், நீலகிரி மற்றும் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

முதல் 15-ம் தேதி வரை மிதமான மழை
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் லேசான மழை
சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
மன்னார் வளைகுடா தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் இலங்கை கடற்கரை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

சூறாவளிக்காற்று
மன்னார் வளைகுடா தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் இலங்கை கடற்கரை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, வரும் 14-ம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications