சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஸ்வரூபம் எடுக்கும் முதல்வர் ஸ்டாலின்.. அதிமுக "வாஷ்-அவுட்".. உள்ளாட்சி முடிவுகள் சொல்வது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மாபெரும் தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி கிட்டத்தட்ட அதிமுகவை வாஷ் அவுட் செய்துவிட்டது என்று சொல்லும் அளவிற்கு முடிவுகள் அமைந்து உள்ளன.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிபெறும் என்று அரசியல் வல்லுனர்கள் பலரும் கணித்து இருந்தனர். அதிலும் திமுக கூட்டணி 180 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் வாய்ப்பு கூட இருப்பதாக பல்வேறு கணிப்புகள் தெரிவித்தன. கணிக்கப்பட்டது போலவே திமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது.

ஆனால் திமுக நினைத்த அளவிற்கு அது இமாலய வெற்றி கிடையாது. சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களிலும் திமுகவின் உதய சூரியன் சின்னம் 133 இடங்களிலும் வென்று ஆட்சியை பிடித்தது.

எடப்பாடி பழனிச்சாமி கோட்டையில் திமுக அபாரம்.. சிக்கனம்பட்டி, தாதாபுரத்தில் அதிமுகவுக்கு பின்னடைவு எடப்பாடி பழனிச்சாமி கோட்டையில் திமுக அபாரம்.. சிக்கனம்பட்டி, தாதாபுரத்தில் அதிமுகவுக்கு பின்னடைவு

சட்டசபை தேர்தல்

சட்டசபை தேர்தல்

திமுக இதற்கு முன் இதைவிட பெரிய வெற்றிகளை சட்டசபை தேர்தலில் பெற்று இருக்கிறது. இதனால்தான் தேர்தல் வெற்றிக்கு பின் ஸ்டாலின் கூட.. நாம் வெற்றிபெற்றுவிட்டோம். அடுத்த தேர்தலில் இதைவிட அதிக இடங்களை பெற வேண்டும். நமக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமின்றி வாக்களிக்காதவர்களுக்கும் நாம் நல்லது செய்து, அடுத்த தேர்தலில் அவர்களின் ஆதரவையும் பெற வேண்டும் என்று குறிப்பிட்டார். வெற்றிபெற்ற இடங்கள் குறைவாக இருந்ததால் ஸ்டாலின் இப்படி குறிப்பிட்டார். முதல்வர் ஸ்டாலின் எதிர்பார்த்த அந்த ஆதரவு திமுகவிற்கு இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிடைத்துவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

சட்டசபை தேர்தல்

சட்டசபை தேர்தல்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 140 இடங்களில் திமுக 138 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. 1381 ஒன்றிய கவுன்சிலருக்கான இடங்களில் 971 இடங்களில் திமுகவும், 195 இடங்களிலும் அதிமுகவும், 5 இடங்களிலும் அமமுகவும், 35 இடங்களில் பாமாவும் முன்னிலை வகிக்கிறது.

தேர்தலுக்கு பின் மாறினார்

தேர்தலுக்கு பின் மாறினார்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக இமாலய வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். தேர்தலுக்கு பின் முதல்வர் ஸ்டாலின் எடுத்த முடிவுகள், நிலைப்பாடுகள் என பல விஷயங்கள்தான் இந்த தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக மாறியுள்ளது. வெறும் திமுக தலைவராக இருந்த ஸ்டாலின் முதல்வராக மாறிய பின் எடுத்த ஒவ்வொரு முடிவும் ஆட்சி மீதான மதிப்பை கூட்டி தேர்தல் முடிவிலும் எதிரொலித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடு

கொரோனா கட்டுப்பாடு

முதல் விஷயம் கொரோனா கட்டுப்பாடு. திமுக ஆட்சிக்கு வந்த முதல் வாரம் 30 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி கேஸ்களையும், ஆக்சிஜன் தட்டுப்பாட்டையும் சமாளித்து கொரோனா பரவலை தமிழ்நாடு கட்டுப்படுத்தியது. வடஇந்தியாவில் கங்கை நதியில் பிணங்கள் மிதந்துகொண்டு இருந்த போது தமிழ்நாடு அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் இரவு நேரத்தில் கூட ஆக்சிஜன் வருகை ஒவ்வொரு நாளும் உறுதி செய்து பரவலை கட்டுப்படுத்தியது பெரும் வரவேற்பை பெற்றது. இப்போதும் தொடர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நலத்திட்டங்கள் அறிவிப்பு

நலத்திட்டங்கள் அறிவிப்பு

அதன்பின் தேர்தல் நேரத்தில் கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றியது. பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம், பெட்ரோல் விலை குறைப்பு, கோவில் சீரமைப்பு, ரேஷன் அட்டை தாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் பணம், மளிகை பொருட்கள் விநியோகம், நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் என்று பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டது. சமூக நீதி ரீதியான திட்டங்கள் காரணமாக தமிழ்நாடு தாண்டி தேசிய அளவில் முதல்வர் ஸ்டாலின் கவனிக்கப்பட்டார்.

புகழ்பாட வேண்டாம்

புகழ்பாட வேண்டாம்

தேசிய அளவில் கவனிக்கப்பட்ட போதும் கூட அரசியல் ரீதியாக இதற்கு முன்பு இல்லாத ஒரு மாண்பை முதல்வர் ஸ்டாலின் கடைபிடித்தார். அம்மா உணவகத்தின் பெயரை மாற்ற மாட்டேன் என்று அறிவித்தது. அதோடு முன்னாள் ஆட்சி தலைவர்களின் புகைப்படங்களை புத்தக பையில் இருந்து அகற்ற வேண்டாம் என்று கூறியது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர் தனது முன்னாள் முதல்வர் இல்லத்திலேயே இருக்கலாம் என்று அனுமதி அளித்தது என்று முதல்வர் ஸ்டாலின் அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய மாண்பை கடைபிடித்தார்.

கொஞ்சம் அரசியல்

கொஞ்சம் அரசியல்

இதெல்லாம் சேர்ந்து ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலினுக்கு "லீடர்" என்ற நன்மதிப்பை பெற்றுக்கொடுத்தது. அவருக்கு வாக்களிக்காதவர்களுக்கு இடையிலும் இது வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. அவ்வப்போது திடீரென போலீஸ் நிலையம் செல்வது, எதிர் வீட்டார் வீட்டிற்குள் செல்வது, சைக்கிள் பயணம், உடற்பயிற்சி, கான்வாயை நிறுத்தி மக்களிடம் பேசுவது என்று சில பிஆர் தொடர்பான விஷயங்களை செய்தாலும், அதுவும் கூட வரவேற்க்கத்தக்க வகையில்தான் இருந்தது.

 எதிர்க்கட்சி அனுசரிப்பு

எதிர்க்கட்சி அனுசரிப்பு

எதிர்க்கட்சி தலைவர்களை கடுமையாக விமர்சிக்க கூடாது, சட்டசபையில் புகழ் துதி பாட கூடாது என்று ஒரு பக்கம் அரசியல் மாண்பை கடைபிடித்தார். அதே சமயம் இன்னொரு பக்கம் கோடநாடு வழக்கு, எஸ் பி வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களுக்கு எதிரான ரெய்டு, கிஷோர் கே சாமி போன்றவர்களுக்கு எதிரான நடவடிக்கை என்று அரசியல் ரீதியாகவும் சட்ட ஒழுங்கு ரீதியாகவும் பல அதிரடி நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் எடுத்து வந்தார். இதெல்லாம் பொது மக்களிடம் அவருக்கான இமேஜை உருவாக்கியது.

சொந்த கட்சிக்காரர்களிடம் கண்டிப்பு

சொந்த கட்சிக்காரர்களிடம் கண்டிப்பு

ஏன் எம்பி ரமேஷ் மீதான கொலை வழக்கு, எம்பி ஞானதிரவியம் மீதான வழக்கு என்று சொந்த கட்சிக்காரர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பு காட்டினார். இப்படி அனைத்து பக்கமும் மிகவும் கவனமாக காய் நகர்த்தியதால் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு விமர்சனம் வைக்க பெரிய அளவில் எந்த விஷயமும் கிடைக்கவில்லை. எதிர்கட்சிகளுக்கு இடம் கொடுக்காமல் தொடர்ந்து முறையாக திட்டம் வகுத்து ஆட்சி புரிந்தது முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த தேர்தலில் உதவி உள்ளது.

கொஞ்சம் நாட்கள்தான்

கொஞ்சம் நாட்கள்தான்

ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள்தான் ஆகிறது, இன்னும் நான்கரை வருடங்கள் இருக்கிறது என்பதால் இதே நிலைப்பாடு, நன்மதிப்பு தொடருமா என்பது கேள்விதான். ஆனால் இப்போதைய நிலவரப்படி தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய தலைவராக ஸ்டாலின் உருவெடுத்துள்ளார் என்பதே நிதர்சனம். அது 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் எதிரொலித்துள்ளது. ஆனால் அந்த இடத்தை தக்க வைப்பாரா தொடர்ந்து விமர்சனம் இன்றி ஆட்சி புரிவாரா என்பது போக போகத்தான் தெரியும்.

English summary
TN Local Body Election Result: How did CM M K Stalin rose to a top leader in the state after winning assembly election?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X