ஒரு பக்கம் மத்திய அமைச்சர் பட்டியல்.. மறுபுறம் மாநில அமைச்சர்கள் மாற்றம்.. ஸ்டாலின் டபுள் ஸ்ட்ராங்!
சென்னை: அமைச்சரவை மாற்றத்திற்கு திமுக அரசு தயாராகி வருவதாகப் பேச்சுகள் அடிபடத் தொடங்கி உள்ளன.
ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் நடந்து முடிந்துள்ளது. அதனை அடுத்து உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்று முதலமைச்சர் ஸ்டாலின் கைக்கு வந்து சேர்ந்துள்ளது.

அதில், கடந்த 2019 தேர்தலில் 39 இடங்களை வென்றதைப் போன்ற ஒரு மாஸ் வெற்றி இந்த முறை கிடைக்காது என அதில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆகவே, எங்கே அடி கிடைக்கும்? எங்கே வெடி போட்டுக் கொண்டாடும் அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்று காத்திருக்கிறது திமுக.
இதனிடையே தேர்தல் பொறுப்பாளர்களாக பணியாற்றிய அமைச்சர்களை அழைத்துச் சந்தித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அந்தச் சந்திப்பில் பலரும் கள நிலவரம் எப்படி? வெற்றி வாய்ப்புக்காக எப்படி எல்லாம் அரும்பாடு பட்டோம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
அதனிடையே நமக்கு எங்கு எல்லாம் சறுக்கல்கள் வரும் என்பதைப் பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறார் ஸ்டாலின்.
அவர் தேர்தலுக்கு முன்பே எந்தத் தொகுதியில் கட்சியின் வேட்பாளர் தோல்வி அடைகிறார்களே அந்த மாவட்டச் செயலாளர்கள் உட்படப் பொறுப்பு அமைச்சர்களுக்கும் ஆப்பு காத்திருக்கிறது என்று தேர்தலுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலேயே எச்சரிகை விடுத்திருந்தார்.

அதற்கான முன்னோட்டம்தான் இந்தச் சம்பிரதாயமான சந்திப்பு எல்லாம் என்கிறார்கள் சில உடன்பிறப்புகள்.
இந்தத் தேர்தலில் சில அமைச்சர்கள் தங்களின் ஆதரவாளர்களுக்குச் சீட்டு ஒதுக்கும்படி கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், அதற்கு மாறாக வேறு சிலருக்குச் சீட்டு ஒதுக்கியதால், அமைச்சர்கள் சிலர் புகைச்சலிலிருந்தனர்.
அதனால், தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் அளவைக் குறைத்துக் கொண்டு, வேலை பார்த்துள்ளனர்.
'நம்ம ஆளுக்குத்தான் சீட்டு இல்லையே? அப்புறம் ஏன் செலவு செய்ய வேண்டும்?' என்று அவர்கள் தங்களின் தொண்டர்களை அடக்கி வாசித்தால் போதும் என உள்ளடி வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக தலைமைக்குத் தகவல் பாய்ந்துள்ளது.
ஆக, எப்படிப் பார்த்தாலும் வரும் ஜூன் 4 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் ரிசல்ட்டுக்குப் பின்னர் அமைச்சரவை மாற்றம் கன்ஃபார்ம் என்கிறார்கள்.
அப்படி அமைச்சரவை மாற்றம் நடைபெற்றால் இந்த முறை கொங்கு மண்டலத்திற்கு அதிக வாய்ப்பை தருவார் ஸ்டாலின் என்று சொல்கிறார்கள். அதற்குக் காரணம், அந்த பெல்ட்டில் திமுக கால்பதிக்க வேண்டும் எனத் தலைமை விரும்புகிறதாம்.
அண்ணாமலையின் ராஜ்ஜியத்தைக் குறைக்க இந்த திட்டத்தை திமுக கையில் எடுத்துள்ளது. அண்ணாமலை ஒரு பக்கம், எடப்பாடி இன்னொரு பக்கம் என இரட்டைத் தலைமை கொங்கு பெட்டில் மையம் கொண்டுள்ளதால், திமுக இந்த முன்னேற்பாட்டைச் செய்ய உள்ளது என்கிறார்கள்.
கூடவே அமைச்சரவை மாற்றத்துடன் சில மாதங்கள் முன்பே துணை முதல்வர் பதவிக்காகக் காத்திருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த முறை துணை முதல்வர் வாய்ப்பும் வழங்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

அதன் மூலம் சீனியர்களை கொஞ்சம் ஓய்வு எடுக்க வைத்துவிட்டு, இளைஞர்களை அமைச்சரவையில் சேர்க்கலாம் என்றும் ஒரு கருத்து கட்சிக்கு ஓடிக்கொண்டுள்ளது.
2026இல் வர உள்ள தேர்தலில் உதயநிதிக்கு ஒரு முக்கியத்துவம் தேவை. ஆகவே, அதை நோக்கியே காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன என்கிறார்கள் உபிகள்.
இன்னொரு கோஷ்டியோ அது எல்லாம் இல்லை. மத்திய அமைச்சர்களின் பட்டியலைத்தான் முதல்வர் தயாரித்து வருகிறார் என்கிறார்கள்.
காங்கிரஸ் கூட்டணி கட்டாயம் ஆட்சியைப் பிடித்துவிடும். ஆகவே அதற்குத் தயாராகவே அவர் பலருடன் ஆலோசனை நடத்தி வருகிறார் என்றும் இன்னொரு தரப்பு தகவலைத் தட்டி விடுகிறது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், எந்தத் துறையை மீண்டும் பெறலாம். மத்தியில் ஆட்சியில் பங்கு கொள்வதன் மூலம் திமுகவைத் தேசிய அளவில் எப்படி வளர்த்து எடுக்கலாம் என்று ஒரு பெரிய செயல் திட்டம் முன்பே தயார் நிலையில் உள்ளது என்றும் சொல்கிறது கட்சியின் ரகசியங்களை அறிந்த உள் வட்டம்.
திமுக மாநிலக் கட்சியாகப் பெற்ற அங்கீகாரத்தைவிட 1998க்குப் பிறகு மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற பிறகு அடைந்த வளர்ச்சியே அதிகம்.
ஆகவேதான் தேசிய அரசியலில் ஒரு அதிகாரம் நமக்குத் தேவை எனப் போர் யுக்திகளை வகுத்து மோடியை எதிர்ப்பதன் மூலம் அதைப் பிற மாநிலங்களுக்கு உணர்த்தி வந்தது திமுக.
ஆக, ஒரு பக்கம் மாநில அமைச்சரவை மாற்றம். இன்னொரு பக்கம் மத்தியில் அதிகாரப் பகிர்வு என டபுள் உற்சாகத்தில் உள்ளது திமுக.
ராகுல்காந்தி வேறு ஸ்டாலினை அண்ணன் என்று அதிக பாசம் காட்டுவதால் இந்தப் பாசப் பறவைகள் ஜூன் 4க்கு பிறகு நடு வானில் பறப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications