எடப்பாடிக்கு பதில் சந்திரபாபு நாயுடு.. அதிமுகவுக்கு பதில் தெலுங்கு தேசம்.. அட.. என்னங்க சொல்றீங்க?
சென்னை: பாஜக கூட்டணியில் அதிமுக இருந்திருந்தால் 15 முதல் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும் என்பதைத் தேர்தல் முடிவுகள் படம்பிடித்துக் காட்டியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிமுகவுக்கு இது முதல்முறை ஏற்பட்டுள்ள தோல்வி இல்லை. கடந்த 2019இல் அதிமுக ஒரே ஒரு தொகுதியில்தான் வெற்றி பெற்றது. அப்போது அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தது. பாமக மற்றும் தேமுதிக இருந்தன. மிகப்பெரிய கூட்டணி பலம் இருந்து அதிமுக ஒரு சீட்டு வென்றது.

இது எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்ற பிறகு சந்தித்துள்ள முதல் மக்களவைத் தேர்தல். இந்தத் தோல்வியை அவர் கட்டாயம் எதிர்பார்த்திருப்பார். அவரது அரசியல் அனுபவத்தில் இதைக் கணித்திருக்க முடியாது என்று நிச்சயம் சொல்ல முடியாது. அவர் மட்டுமல்ல; அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட கணித்தே இருந்தனர்.
ஆகவேதான், பெரிய தலைகள் யாரும் தேர்தலில் களம் காணவில்லை. அவர்களின் வாரிசைக் கூட நிறுத்த அஞ்சி ஒதுங்கிக் கொண்டார்கள். அதில் விதிவிலக்கு ஜெயக்குமார் மட்டுமே. அவரது மகனை அவர் களமாடவிட்டார். விளைவு மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
ஜெயலலிதா தலைமையில் அதிமுக இருந்த காலத்தில் பல படுதோல்விகளை அந்தக் கட்சி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் சந்தித்துள்ளது. குறிப்பாக 2004இல் அதிமுக 33 தொகுதிகளில் நின்றது. ரிசல்ட் என்னவோ முட்டைதான் கிடைத்தது. அது ஜெயலலிதாவுக்கு மாபெரும் இடியாக அமைந்தது.
அடுத்து 2009இல் 23 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை நிறுத்தினார் ஜெயலலிதா. கடந்த முறையைவிட 10 வேட்பாளர்களைக் குறைத்துக் கொண்டார். வெற்றி பெற்றது என்னவோ 9 தொகுதிகளில்தான்.
ஜெயலலிதா தலைமையின் கீழ் அதிமுக இயங்க ஆரம்பித்த பிறகு 1996 மற்றும் 2004 ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிமுக முட்டை வாங்கி இருக்கிறது.
அப்படிப் பார்த்தால் 2019இல் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையிலிருந்தபோது அதிமுக 1தொகுதியில் வென்றது. அதுவும் ஒபிஎஸ் மகன் தேனியில் வென்றார். இபிஎஸ் பலமாக உள்ள கொங்கு மண்டலத்தில் முட்டை மார்க் வாங்கி இருந்தார். நின்ற அனைத்து வேட்பாளர்களும் தோல்வியைத் தழுவி இருந்தனர்.
இந்த 2024இல் அதிமுகவின் ஒற்றை தலைமையாக இபிஎஸ் மட்டுமே உள்ளார். அதிலும் முட்டை மார்க் எடுத்துள்ளார். ஒரு வேட்பாளர்கள் கூட வெற்றி பெறவில்லை என்பதுடன் கொங்கு மண்டலத்தில் அதிமுக பாஜகவை விட பின் தங்கி 3 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
2019இல் பாஜக கூட்டணியில் 22 வேட்பாளர்களை நிறுத்திய அதிமுக இம்முறை 36 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. இதனால் தோல்வியைத் தழுவினாலும் வாக்கு சதவீதம் அதிகமாகும் எனப் பலரும் கணித்தார்கள்.
ஆனால், அதற்கு நேர்மாறாக வாக்கு சதவீதம் 23% ஆகக் குறைந்துபோய் உள்ளது. ஜெயலலிதா ஒரு தொகுதியில் வெல்லாத காலகட்டத்தில் அக்கட்சியின் வாக்கு சதவீதம் என்பது 30% என்ற அளவில் நிலையாக இருந்தது. அப்படிப் பார்த்தால் இப்போது கிட்டத்தட்ட 7% இறங்கியுள்ளது.
ஜெயலலிதா அளவுக்கு எடப்பாடி ஒரு ஆளுமை இல்லை. ஆகவே, குறைவது சகஜம்தான். இருந்தாலும் அவர் இதை எப்படி மீட்கப் போகிறார் என்பதற்கான அறிகுறிகள் அவரது நடவடிக்கைகளில் தெரியவில்லை.
ஏனென்றால், வாக்கு சதவீதம் குறைந்ததோடு மட்டுமல்ல; 9 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது நல்ல அறிகுறி அல்ல. சென்னையில் உள்ள 2 தொகுதிகள் இதில் அடங்கும்.
ஒரு காலத்தில் திமுகவின் கோட்டையாக இருந்து வந்த சென்னையை அதிமுகவின் கோட்டையாகக் கட்டி எழுப்பியிருந்தார் ஜெயலலிதா. அந்தக் கோட்டைக்குள் முதன்முறையாக டெபாசிட் இழக்கும் அளவுக்கு ஓட்டை விழுந்துள்ளது.
ஜெயலலிதாவால் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்பியான ஜெயவர்த்தன் டெபாசிட் இழந்துள்ளார். தென்சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் 290683 ஓட்டுகளை வாங்கி இருக்கிறார். ஜெயவர்த்தன் 172491 வாக்குகளைப் பெற்றுள்ளார். ஒருவேளை பாஜக கூட்டணியில் அதிமுக இருந்திருந்தால், இந்த ஓட்டுகள் சிதறி இருக்காது. வெற்றிக்கு அது பாதையாக மாறியிருக்கும்.
2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ள பாடம் என்ன தெரியுமா? சுமார் 15 தொகுதிகளில் அதிமுக + பாஜக வாங்கி உள்ள ஓட்டுகளைச் சேர்த்துக் கூட்டினால் திமுகவைத் தோற்கடித்திருக்க முடியும் என்பதைத்தான் காட்டியுள்ளன. ஆக, பாஜகவுடன் அதிமுக இருந்திருந்தால் கிட்டத்தட்ட 15 முதல் 20 தொகுதிகள் கிடைத்திருக்கும் என்பது உறுதி.

இன்னொரு விசயம் பாஜகவைவிட்டு விலகிவிட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தபோதும் சிறுபான்மையினர் வாக்குகள் அவரது கட்சிக்குக் கிடைக்கவில்லை என்பது.
குறைத்து மதிப்பிட்டால் கூட பாஜக மற்றும் அதிமுக அணி நீடித்திருந்தால், சுமார் 16 தொகுதிகளை இந்தக் கூட்டணி பெற்றிருக்கும். அப்படி ஒரு நிலை உருவாகி இருந்தால், சந்திரபாபுவை ஒதுக்கிவிட்டு எடப்பாடி பழனிசாமி என்.டிஏ கூட்டணியின் கிங் மேக்கர் ஆகி இருப்பார்.
துணிந்து நின்றிருந்தால், துணைப் பிரதமர் பதவியே கேட்டிருக்க முடியும். ஆனால், அத்தனை வாய்ப்பையும் அண்ணாமலை என்ற ஒரு மாநிலத் தலைமையுடனான சண்டையால் பலி கொடுத்துவிட்டார் எடப்பாடி.
அதை நிச்சயம் அவர் உணர்ந்திருப்பார். அதற்கான அறிகுறியாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குரல் வழியே கேட்க முடிகிறது.
பானை உடைந்த பிறகு அதில் நெய் இருந்தால் என்ன நொய் இருந்தால் என்ன? அரசியல் என்பது உணர்ச்சிகளின் குடோன் அல்ல. அது Arithmetic சார்ந்தது. 1+1 என்றால்தான் 2 வரும். ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு 2 ஆக முடியாது.
இதைத்தான் அதிமுக எதிர்காலத்தில் உணரவேண்டிய பாடம், படிப்பினை எல்லாம்!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications