அடக்கி வாசித்த ஆண்கள்? எகிறி அடித்த 8.60 லட்சம் பெண்கள்! மகளிர் உரிமைத் தொகை வேலை செய்கிறதா?
சென்னை: ஆண்களை விடப் பெண்கள் அதிகமாக வாக்களிக்க முன் வந்ததற்கு திமுக கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம்தான் காரணமா?
நாடு முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாகத் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் சில யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற்றது.

தமிழ்நாட்டில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 10.92 லட்சம் முதல் தலைமுறை வாக்காளர்கள் முதல் முறையைச் சேர்ந்தவர்கள் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. .
இந்தியாவில் மொத்தம் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 வாக்காளர்கள் உள்ளதாகவும் ஆணையம் கூறியிருந்தது.
அதில் 18 வயது நிறைவடைந்து முதல் தலைமுறை வாக்காளர்கள் சுமார் 1.8 கோடி பேர் உள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியாகி இருந்தது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான தேர்தலில் மொத்தம் வாக்குப்பதிவானது 69.72% என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வாக்குப்பதிவு நடைபெற்ற நாளிலிருந்தே தமிழகத்தில் உள்ள 10 தொகுதிகளில் வாக்கு சதவீதத்தை மாநிலத் தேர்தல் ஆணையம் மாற்றி மாற்றிக் கூறிய விவகாரம் சர்ச்சையைக் கிளப்பி இருந்தது.
அந்தக் குழப்பங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதைப்போலத் தலைமைத் தேர்தல் ஆணையம் இறுதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் அதிகபட்சமாகத் தர்மபுரியில் 81.20% வாக்குகள் பதிவாகி உள்ளன என்றும் குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.96% வாக்குகள் பதிவாகி உள்ளன என்றும் தெரியவந்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக கள்ளக்குறிச்சியில் 79.21% வாக்குகள் பதிவாகி உள்ளன. மேலும் கரூரில் 78.70%, நாமக்கல்லில் 78.21%, சேலத்தில் 78.16% என்று ஒரே அளவில் வாக்கு சதவீதம் பதிவாகி உள்ளது பலரது கவனத்தை ஈர்க்கும்படியாக உள்ளது.
இந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் 2.21 கோடி பெண்கள் வாக்களித்துள்ளனர். அதாவது ஆண்களை விட 8.60 லட்சம் பெண்கள் கூடுதலாக வாக்களித்துள்ளனர்.

இதற்கு என்ன காரணம்? என்ற சந்தேகம் இப்போது புதியதாக முளைத்துள்ளது. சிலர் திமுக கொண்டுவந்துள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டம், மகளிருக்கு இலவச பேருந்து சேவை திட்டம், கல்லூரி பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் ஆகியவைதான் காரணம் என்று வாதிட்டு வருகின்றனர்.
இந்தத் திட்டங்களால் பெண்கள் பெரிதும் பலனடைந்துள்ளன. அதனால் ஆர்வத்துடன் வாக்களிக்க ஆண்களைவிட முன்வரிசையில் நின்று வாக்களித்துள்ளனர் என்ற ஒரு கருத்தை முன்வைத்து வருகின்றனர்.
ஒருசிலர் ஆண்களைவிடப் பெண்கள்தான் வழக்கமாக அதிகம் வாக்களிப்பார்கள். அதில் ஒரு ஆச்சரியமும் இல்லை என்றும் கூறுகின்றனர்.
இந்த இரண்டு வகையான கருத்துகளில் எது சரியானது என்பது பற்றி ஆராய வேண்டியது அவசியம்.
அப்படிப் பார்த்தால் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் 27 மாவட்டங்களில் ஆண்களைவிட 5 லட்சம் பெண்கள் கூடுதலாக வாக்களித்திருந்தனர்.
அப்போது திமுக பெண்களை மையப்படுத்திக் கொண்டு வந்த எந்தத் திட்டங்களும் நடைமுறையில் செயல்பாட்டில் இல்லை.
அப்படி இருந்தும் ஆண்களைவிட அதிகமாக 5 லட்சம் பெண்கள் வாக்களித்திருந்தனர். அதனுடன் ஒப்பிடும் போது இந்த 2024 மக்களவைத் தேர்தலில் 8 லட்சம்தான் அதிகம்.
பழைய கணக்குடன் ஒப்பிட்டால் கூடுதலாக இந்த முறை சுமார் 3 லட்சம் பெண்கள் வாக்களித்துள்ளனர்.
திமுக பெண்களை மையப்படுத்திக் கொண்டுவந்துள்ள திட்டங்களால் பலன் பெற்ற பெண்களின் 1.5 கோடிக்கு மேல் எனச் சொல்லப்படுகிறது. அதில் இந்த 8 லட்சம் என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications