நகை கடன்களில் மட்டும் அல்ல-தாலிக்கு தங்கம் திட்டத்திலும் மெகா ஊழல்- வசமாக சிக்கும் அதிமுக மாஜிக்கள்!
சென்னை: முந்தைய அதிமுக அரசில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்தது. முக்கியத் துறைகளின் மாஜிக்கள் மீது விஜிலென்ஸ் வழக்குகள், ரெய்டுகள் பாய்ந்தன. தற்போது ஒரு முக்கிய ஊழல் ஒன்று அரசின் கவனத்துக்கு போயிருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன் என பலரும் ஊழல் முறைகேடு புகார்களில் சிக்கி உள்ளனர். இவர்களில் பலரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனைகளில் ரொக்க பணம், நகைகள், வெள்ளி பொருட்கள், முக்கியமான சொத்து ஆவணங்கள் சிக்கி இருக்கின்றன. இந்த அமைச்சர்களின் பினாமிகள், வலதுகரங்களும் இப்போது சிக்கி வருகின்றனர். அதிமுக மாஜிக்கள் அத்தனை பேருக்கும் இது நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்
இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திலும் மெகா ஊழல் நடந்திருப்பது அம்பலமாகி இருக்கிறது. அதாவது, கடந்த அதிமுக அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்று...தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம். பட்டதாரி பெண்களுக்கு 1 சவரன் தங்கமும், ரூபாய் 50,000 நிதி உதவியும், பட்டதாரி அல்லாத பெண்களுக்கு 1 சவரன் தங்கமும் ரூபாய் 25,000 நிதி உதவியும் வழங்குவது இந்த திட்டத்தின் அடிப்படை

8 கிராம் தங்கமாக அதிகரிப்பு
தமிழக அரசின் சமூக நலத்துறை மூலம் இந்த தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் இந்த திட்டம் துவக்கப்பட்டபோது, 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. பின்னர் மாஜி முதல்வர் எடப்பாடி அரசில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் தங்கத்தின் அளவு 8 கிராம் ஆக உயர்த்தப்பட்டது. இருப்பினும், 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவலைக் காரணம் காட்டி இத்திட்டத்தின் படி தாலிக்கு தங்கத்தை வழங்கவில்லை எடப்பாடி அரசு.

நிலுவையில் விண்ணப்பங்கள்
இதனால் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களின் விண்ணப்பம் இன்னமும் கிடப்பில் இருக்கிறது. இந்த திட்டத்தினை முறைப்படுத்த தற்போதைய திமுக அரசு சில நடைமுறை விதிகளையும் கொண்டு வந்தது. இந்த நிலையில், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை ஆராய்ந்த சமூக நலத்துறை, தங்கத்தின் தரம் மிக மோசமாக இருந்ததை கண்டுபிடித்திருக்கின்றனர்.

தங்கத்தில் மெகா மோசடி
அதாவது தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் தங்கத்தின் மதிப்பு வெறும் 16, 18 காரட் அளவில் தான் இருந்துள்ளதாம். பொதுவாக 22 காரட் இருந்தால் தான் தங்கத்திற்கு மெய்யான மதிப்பு. ஆனால் 18-க்கு கீழே இருந்தால் தங்கத்துக்கு என எந்த மதிப்பும் இல்லையாம். அதனால் இதில் நடந்துள்ள முறைகேடுகளை ஆராய்கிறது சமூகநலத்துறை. இந்த விவகாரம் வெளியே வரும் போது, நகைக் கடன் மோசடி போல் பெரிதாக வெடிக்கும்; அதிமுக மாஜிக்கள் சிக்குவார்கள் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications