அதிவேக ரயில் பாதை.. கேட்க நல்லா இருக்கா? ஆனா, தமிழ்நாட்டுக்குள் எந்த புதிய ரயில் திட்டமும் கிடையாது!
சென்னை: சென்னையை ஹைதராபாத் மற்றும் பெங்களூருடன் இணைக்கும் வகையில் புதிய, அதிவேக ரயில் பாதை திட்டம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டிருக்கிறது. இது கேட்க நன்றாக இருந்தாலும், ஏற்கெனவே தமிழ்நாட்டிற்குள் அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் என்ன ஆனது என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
அதிவேக ரயில் பாதை என்பது உடனே அடுத்த ஆண்டில் வந்துவிடும் திட்டம் கிடையாது. இது வருவதற்கு குறைந்தது 5-10 ஆண்டுகள் வரை ஆகலாம். எனவே இந்த திட்டம் எந்த வகையிலும் உடனடி பலன் கொடுக்காது. அப்படியே திட்டம் வந்தாலும் அது சாமானிய மக்களுக்கு பலன் கொடுக்காது.

தமிழகத்திற்கான திட்டங்கள்
இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டம் என்ன ஆனது? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கோயம்புத்தூர், மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. அதேபோல சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி அறிவிப்பு வெளியாகவில்லை. இதெல்லாம் தெரிந்தது. ஆனால், கவனத்திற்கு வராமல் நீண்ட காலமாக பல முக்கிய திட்டங்கள் பெண்டிங்கில் இருக்கின்றன.
- மதுரை - அருப்புக்கோட்டை- தூத்துக்குடி புதிய பாதை
- ஈரோடு - பழனி புதிய ரயில் பாதை
- சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி
- திண்டிவனம் - திருவண்ணாமலை
- பழனி - சாம்ராஜ்நகர்
குறைவான நிதி
இதெல்லாம் கடந்த காலங்களில் முக்கிய திட்டமாக அறிவிக்கப்பட்டு, தற்போது வரை செயல்படுத்தப்படாமல் நிலுவையில் இருக்கும் திட்டங்களாகும். சுமார் 143 கி.மீ நீளம் கொண்ட, மதுரை - அருப்புக்கோட்டை- தூத்துக்குடி புதிய பாதை திட்டம் தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கனவாகும். ஆனால், ஒவ்வொரு பட்ஜெட்டிலும், இந்த திட்டத்திற்கு டோக்கன் தொகையாக குறைந்த அளவே நிதி ஒதுக்கப்படுவதால் பணிகள் மெதுவாக நடைபெறுகின்றன.
ஈரோடு மக்களின் கனவு
ஈரோடு - பழனி புதிய ரயில் பாதை திட்டத்தை பொறுத்தவரை, சுமார் 91 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும். இது 70 ஆண்டு கோரிக்கையாக இருக்கிறது. இந்த திட்டத்தை நிறைவேற்ற கேட்டு பயணிகள் பலமுறை கோரிக்கை வைத்தாலும், பட்ஜெட்டில் வெறும் ரூ.1,000 மட்டுமே டோக்கன் நிதியாக பலமுறை ஒதுக்கப்பட்டிருந்தது. திட்டத்தை நிறைவேற்ற ரூ.1,500 கோடி முதல் 2,000 கோடி வரை தேவைப்படலாம்.
நிலம் கையகப்படுத்துவது
சென்னை-மாமல்லபுரம்-புதுச்சேரி ரயில் பாதை திட்டம் என்பது, சுமார் 179 கிலோமீட்டர் நீளம் கொண்ட பாதையை அமைக்கும் திட்டமாகும். இந்த திட்டம் 2008-2009ம் ஆண்டு பட்ஜெட்டிலே அங்கீகரிக்கப்பட்டது. இருப்பினும் 15 ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. குறிப்பாக நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதம் காரணமாக, திட்டம் தள்ளிப் போயிருக்கிறது.
திருவண்ணாமலைக்கு திட்டம்
திண்டிவனம்-திருவண்ணாமலை புதிய ரயில் பாதை 70 கிலோமீட்டர் நீளம் கொண்ட திட்டமாகும். கடந்த 2007-2008 பட்ஜெட்டில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் 18 ஆண்டுகளாகியும் இன்னும் திட்டம் முழுமை பெறவில்லை. தொடக்க காலங்களில் நிதி மிக குறைவாக ஒதுக்கப்பட்டதும், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமும் இந்த திட்டத்தை தற்போது வரை நிறைவேற்ற முடியாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறது.
இரு மாநிலங்களுக்கு முக்கியமான திட்டம்
பழனி-சாம்ராஜ்நகர் புதிய ரயில் பாதை திட்டம் தமிழக மற்றும் கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் மிக முக்கியமான, அதே சமயம் கடினமான ரயில்வே திட்டங்களில் ஒன்றாகும். இதன் நிலம் 120 கிலோமீட்டர். மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தால், திட்டத்தை நிறைவேற்ற முடியும். ஆனால், இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications