வடகிழக்கு பருவமழை.. அரசுப் பள்ளிகளில் செய்ய வேண்டியவை என்ன? ஆசிரியர்களுக்கு வந்த அறிவுறுத்தல்!
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பாக பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தீபாவளி விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி பள்ளிக் கல்வித்துறை சார்பாக பல்வேறு அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த 16ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதன்பின் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்தடுத்து இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி இருப்பதால், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் காலை முதலே கனமழை கொட்டி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீபாவளி விடுமுறை முடிவடைந்து நாளை தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பாக பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், பள்ளி வளாகத்தில் கட்டடங்கள், கழிப்பறைகள், சுவர்களை ஆய்வு செய்து செடி, கொடியை அகற்ற வேண்டும்.
அதேபோல் மாதந்தோறும் பராமரிப்பு, ஆய்வு செய்து செடி, கொடிகள் வளர்வதை தடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆசிரியர்கள், மாணவர்களிடையே வளாகத்தை பராமரிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், பள்ளியில் திறந்த வெளி கிணறு, கழிவுநீர் தொட்டி, கூரை புனரமைப்பு, மின் இணைப்பை கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும் என்பதோடு, மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும். இதனால் நாளை பள்ளிகள் திறக்கும் நிலையில், தலைமை ஆசிரியர்கள் உடனடியாக பள்ளிக் கல்வித்துறையின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications