பிரபல ரெஸ்டாரண்டில் சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்ட இளைஞர் திடீர் உயிரிழப்பு.. என்ன நடந்தது?
சென்னை: பிரபல சிக்கன் ரெஸ்டாரண்டில் சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வியாசர்பாடி ரத்தினம் தெரு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்( 22) .பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு கேமராமேனாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று மாலை பெரம்பூர் பிபி சாலையில் உள்ள தனது நண்பரான கிரிதரன் என்பவரது தனியார் மருந்தகத்திற்கு சென்று உள்ளார்.

சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்டனர்
அங்கு 4 நண்பர்கள் சேர்ந்து பிரபல சிக்கன் ரெஸ்டாரண்டில் சிக்கன் ஆர்டர் செய்துள்ளனர். பின்பு கடையில் அமர்ந்து அனைவரும் சிக்கன் சாப்பிட்டுள்ளனர். அதன் பின்பு அனைவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர் . இதனை தொடர்ந்து ரஞ்சித்தும் இரவு 10 மணியளவில் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அவர் இடது பக்கம் முழுவதும் வலிக்கின்றது எனக் கூறியுள்ளார்.

மர்ம மரணம்
இதனையடுத்து வாந்தியும் எடுத்துள்ளார். இதனால் பதறிப்போன அவரது அண்ணன் அவரை அழைத்துக் கொண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரஞ்சித் திடீரென்று மயக்கம் அடைந்துள்ளார். மருத்துவமனையில் ரஞ்சித்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

என்ன நடந்தது?
இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பிரபல தனியார் சிக்கன் ரெஸ்டாரண்டில் சிக்கன் சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே ரஞ்சித் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதுபற்றி விரிவான விசராணை நடத்த வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ரஞ்சித் இறந்ததற்கு காரணம் என்ன? அன்று இரவு என்ன நடந்தது? என்பது குறித்து
போலீசார் வழக்குப்பதிவு செய்து நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் கூறுவது என்ன?
ரஞ்சித்துடன் மொத்தம் 3 பேர் சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு எந்தவிதமான உடல் உபாதையும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. ரஞ்சித்தின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவில்தான் ரஞ்சித் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்..












Click it and Unblock the Notifications