தமிழ்நாடு தினத்தை கொண்டாட நமக்கென்று ஒரு கொடி வேண்டும்.. கொமதேக ஈஸ்வரன் வலியுறுத்தல்
சென்னை: நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு தினம், தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை வரவேற்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கூறியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார் அதில் தமிழ்நாடு உருவாக்கப்பட்ட தினமான நவம்பர் 1 -ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்திருப்பதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்

பல வருடங்களாக நவம்பர் 1 -ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாடி வருகின்ற நாங்கள் தொடர்ந்து அரசுக்கு வைத்து வந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுவதன் நோக்கமே ஒவ்வொரு தமிழனும் ஜாதி, மத வித்தியாசமில்லாமல் அரசியல் வேறுபாடுகளை மறந்து தான் தமிழன் என்ற ஒரே உணர்வு மேலோங்க வேண்டும் என்பதற்காக தான்.
அரசு கொண்டாட போகின்ற தமிழ்நாடு தினத்திற்கு யார் ஆட்சியில் இருந்தாலும் அனைத்துக்கட்சியினரும், தமிழ் ஆர்வலர்களும் அழைக்கப்பட வேண்டும். அன்றைய தினம் வாகனங்களிலும், வீடுகளிலும் அவரவர் கட்சி கொடிக்கு பதிலாக பொதுவான ஒரு கொடியை கட்ட வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டுக்கு என்று தனி கொடி உருவாக்கப்பட வேண்டும்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக இதே நவம்பர் 1 -ஆம் தேதியில் கர்நாடக தினத்தை கொண்டாடி வருகின்ற கன்னடர்கள் கர்நாடகாவிற்கு என்று உருவாக்கப்பட்டிருக்கின்ற தனி கொடியை கர்நாடகா முழுவதும் கட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு நவம்பர் 1 -ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாடினால் மட்டும் போதாது.
மேற்சொன்ன நடவடிக்கைகளை எடுத்து தமிழன் என்ற உணர்வை மேம்படுத்த வேண்டும். தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் தொடர்ந்து காப்பாற்றுவதற்கு இது வழிவகுக்கும்.
இன்றைய காலகட்டத்தில் தமிழகத்திற்கான வளர்ச்சி திட்டங்களுக்கும், தமிழக உரிமைகளை கேட்டு பெறுவதற்கும் அரசியல் ரீதியான எதிர்ப்புகளை எல்லாம் மறந்து தமிழன் என்ற உணர்வோடு மொத்த தமிழர்களும் ஒற்றுமைப்பட வேண்டிய தேவை இருக்கிறது. இந்த நேரத்தில் நவம்பர் 1 தமிழ்நாடு தினம் கொண்டாடப்படும் என்று அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என ஈஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications