ரூ.2000 நோட்டை விடுங்க.. நிதி, முதலீட்டில் இந்த 5 விஷயத்தை கவனிச்சீங்களா? இன்றுதான் கடைசி நாள்!
சென்னை: ரூ.2000 நோட்டை மாற்றுவதற்கு இன்று கடைசி நாளாகும். மேலும் 5 முக்கியமான நிதி, முதலீடு சார்ந்த விவகாரங்களுக்கு இன்றுதான் கடைசி நாள் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி திடீரென டிவியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் அதிகரித்துள்ள கருப்பு பணத்தை ஒழிக்க சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அறிவித்தார். அதன்படி இன்று முதல் 500 மற்றும் 1,000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறியிருந்தார். மக்கள் இந்த நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் நீண்ட வரிசைகள் மக்கள் காத்திருந்தனர்.

மறுபுறம், பெரும் பணக்காரர்கள் தங்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற ஏஜென்ட்டுகளை பயன்படுத்தினர். நீண்ட வரிசையில் காத்திருந்த சிலர் அங்கேயே மயக்கமடைந்து உயிரிழந்தனர். இவையனைத்தும் கருப்பு பணத்தை ஒழிக்க மக்கள் செய்த தியாகம் என்று சொல்லப்பட்டது. இப்படியாக பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர், புதியதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இதனை எடுப்பதற்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை புதிய 2,000 ரூபாய் நோட்டுக்கள் சரிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததைவிட இந்த நோட்டுக்களின் புழக்கம் மக்கள் மத்தியில் குறைவாகவே இருந்தது. இப்போதும் கூட இந்திய கிராமங்களில் ஒரு நாள் வருவாய் 100 ரூபாய் கூட கிடைக்காமல் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்கும் போது 2,000 ரூபாய் நோட்டுக்கான தேவை எதுவும் பெரியதாக எழவில்லை. எனவே இதன் பயன்பாடு வெகுவாக குறைந்தது.
ஒரு கட்டத்தில் அதாவது 2018-2019ம் ஆண்டில் இந்த நோட்டுகள் அச்சடிக்கப்படுவதே முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. இதனையடுத்து 'தூய்மையான ரூபாய் தாள் கொள்கையின்படி' இந்த ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. மே 23 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை இந்த 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம், இந்த கால கெடுவுக்கு பின்னர் இந்த நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி இன்றுடன் இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு முடிவடைகிறது.
அதேபோல மேலும் 5 முக்கியமான நிதி, முதலீடு சார்ந்த விவகாரங்களுக்கு இன்றுதான் கடைசி நாள் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதாவது, அஞ்சல் அலுவலகங்களில் எஸ்சிஎஸ்எஸ் எனப்படுகிற மூத்த குடிமக்கள் திட்டம், அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டம், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் எஸ்பிஐ வீகேர் திட்ட முதலீடு போன்ற திட்டங்களில் பல்வேறு விஷயங்களுக்காக இன்று கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எஸ்சிஎஸ்எஸ் எனப்படுகிற மூத்த குடிமக்கள் திட்டத்தை பொறுத்த வரையில் இந்த திட்டத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் கட்டாயம் அவர்களுடைய ஆதார் எண்ணை இந்த திட்டங்களில் இணைத்திருக்க வேண்டும். இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஒருவேளை ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் உரிய வட்டியை பெற முடியாது. பிபிஎஃப் அல்லது சுகன்யா சம்ரித்தி கணக்குகளில் முதலீடு செய்வதில் சிக்கல்கள் ஏற்படும். இது தவிர முதிர்வுத் தொகை முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாது.

இது மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), பொது வருங்கால வைப்பு நிதி (PPF), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களில் உறுப்பினராக உள்ள அனைவருக்கும் பொருந்தும். அதேபோல மியூச்சுவல் ஃபண்ட் ஃபோர்ட்போலியோக்களுக்கு நாமினியை சேர்ப்பதற்கான கடைசிநாளும் இன்றுதான். ஒருவேளை இன்றும் தவறவிட்டுவிட்டீர்கள் எனில், ஃபோர்ட்போலியோ முதலீடுகளில் வரவு வைக்கப்பட்டாது. மட்டுமல்லாது கணக்குகள் முடங்கும் அபாயமும் இருக்கிறது.
மேலும் டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளில் நாமினையை சேர்க்கும் கடைசிநாளும் இன்றுதான். இது தவிர பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதாவது இனி அரசு வேலைகளுக்கு பிறப்பு சான்றிதழ் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. எஸ்பிஐ வீகேர் திட்டத்தை பொறுத்த அளவில், மூத்த குடிமக்கள் முதலீடு செய்யும் இந்த திட்டத்தில் செப்டம்பர் 30-க்குள் இத்திட்டத்தில் முதலீடு செய்யும் போது 7.50% வட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications