சொத்து ஜப்தி, அபராத வட்டி.. நாளை முதல் எப்படி இருக்கும்.. சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னை மாநகராட்சியில் 5 சதவீத தள்ளுபடியுடன் சொத்துவரி செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், இனி சொத்து ஜப்தி, அபராத வட்டி விதித்தால் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் பல லட்சம் வீடுகள் இருக்கின்றன. சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் மட்டுமே 12 லட்சம் சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களிடம் இருந்து ஆண்டுதோறும் 1,700 கோடி ரூபாயை சொத்து வரியாக மாநகராட்சி நிர்வாகம் வசூலித்து வருகிறது. சென்னை மாநகராட்சியின் முக்கியமான வரியே சொத்து வரி தான்.சொத்து வரியை முறையாக வசூலித்தால் மட்டுமே சரியான வளர்ச்சி திட்ட பணிகளை நகர்பகுதிகளில் மேற்கொள்ள முடியும் என்பதால் அதனை வசூலிக்க பல்வேறு நடவடிக்கைளை மாநகராட்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்தது. சென்னையை பின்பற்றி கோவை உள்பட பிற மாநகராட்சிகளும் இதே திட்டத்தை முன்னெடுக்கவும் செய்தன.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் இந்த நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் ரூ.769 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. 2-ம் அரையாண்டுக்கான சொத்துவரியை அக்டோபர் 31-ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்ததால் பலரும் ஆர்வமுடன் சொத்து வரி செலுத்தினார்கள்.
சென்னை மாநகராட்சி இரண்டாம் அரையாண்டில் மொத்தம் ரூ.850 கோடி சொத்து வரி வசூலிக்க திட்டமிட்டிருக்கிறது. குறிப்பாக, 5 சதவீத தள்ளுபடியுடன் அக்டோபர் 31-ம் தேதிக்குள் ரூ.500 கோடி சொத்து வரி வசூலிக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் இலக்கும் நிர்ணயித்து இருந்தது. ஆனால் தொடர் விடுமுறை நாட்கள் வந்ததால் ரூ.290 கோடியே 61 லட்சம் மட்டுமே சொத்து வரி மட்டுமே வசூலிக்க மாநகராட்சியால் முடிந்தது.
இதனிடையே சொத்து வரியை செலுத்தி, 5 சதவீத தள்ளுபடி சலுகையைப் பெறுவதற்கான காலஅவகாசம் இன்றைக்குள் முடிந்தது. இதையடுத்து சொத்து வரி செலுத்தாதவர்களிடம், புதிய தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்டவிதிகளின்படி, சொத்துகளை ஜப்தி செய்தல், அபராத வட்டி விதித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள போவதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சென்னை மாநகாட்சியில் சொத்து வரி செலுத்துவது எப்படி?: சென்னை மாநகராட்சியில் சொத்து வைத்துள்ள உரிமையாளர்கள், சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் சொத்து வரி கால்குலேட்டரில் எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்பதை கணக்கிடலாம். சென்னை மாநகராட்சி வலைதளத்தில் இதற்கான வசதி உள்ளது. சென்னை மாநகாட்சி வலைதளத்தில் 'Property Tax' டேப் ஐ கிளிக் செய்யவும். 'Property Tax Calculator' இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். இங்கே, உங்கள் சொத்து பற்றிய விவரங்களை நீங்கள் பதிவிட வேண்டும்.
அதாவது எந்த மண்டலம், வார்டு மற்றும் தெருவின் பெயர், குடியிருப்பு மற்றும் குடியிருப்பு அல்லாத பகுதி, வீட்டின் விவரங்கள் உள்பட நீங்கள் அனைத்து தகவல்களையும் அளித்தவுடன், எவ்வளவு தொகை என்பதை திரையில் காட்டப்படும். அதில் 'pay online' என்பதைக் கிளிக் செய்ய சொல்லும்.
பின்னர் 'Submit' என்பதைக் கிளிக் செய்த பிறகு, நீங்கள் கட்டணம் செலுத்தும் பக்கத்திற்கு வருவீர்கள். சென்னை மாநகராட்சியின், அதில், 13 வங்கிகளின் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் வசதி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திற்கு வரி செலுத்தலாம்.
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி விலக்கு: சென்னையில் நிரந்தரம் அல்லாத கட்டிடங்களுக்கு மாத வாடகை மதிப்பில் 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. உரிமையாளர்கள் வசிக்கும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு மாத வாடகை மதிப்பில் 25 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. உரிமையாளர்களால் பயன்படுத்தும் குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு மாத வாடகை மதிப்பில் 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.. 4 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கட்டிடங்களுக்கு அதிகபட்சமாக 25 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications