சுள்ளென்று வெயில்..5 நாட்களுக்கு ஜில்லென்ற மழைக்கு வாய்ப்பு - வானிலையின் கூல் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் இன்று முதல் 17ஆம் தேதி வரைக்கும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை இயல்பை விட கூடுதலாகவே பெய்துள்ளது. அணைகள் நிரம்பி வழிவதால் உபரி நீர் அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது. அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா அலுவலகம் மேல் பவானியில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது. சின்கோனா, சோலையாறு, சின்னக்கல்லார் , கூடலூர் பஜார் பகுதியில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

5 நாட்களுக்கு மிதமான மழை
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 17ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மழை
சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

சூறாவளிக்காற்று
இன்றைய தினம் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகள், மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

வங்கக் கடலில் சூறாவளிக்காற்று
நாளைய தினம் கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
15ஆம் தேதியன்று வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications